லெபனான் – தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரியாமலேயே பேஜரில் குண்டு : அதிர்ச்சித் தகவல்!

Published On:

| By Kumaresan M

லெபனானில் ஹெஸ்பொலா அமைப்பால் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் வெடித்ததில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

நாடு முழுவதும்  கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்து சிதறின.  நேற்று (செப்டம்பர் 17)  நடந்த இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் பலியாகினர். 2,800 பேர் காயமடைந்தனர், அவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இஸ்ரேலிய அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவத்துக்கு வேறு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

சரி… இஸ்ரேல் மீது குற்றம்சாட்ட பல காரணங்கள்  உள்ளன. அவற்றை பார்ப்போம்.

1990 -களில் பேஜர்கள் பிரபலமாக இருந்தன. இது ஒரு மெசேஜிங் கருவி. இதில் வரும் மெசேஜை பார்த்து விட்டு நாம் ஏதாவது லேண்ட் லைன் போனில் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பேசலாம்.

நாளடைவில் செல்போன்கள் வருகையால் பேஜர்கள் காணாமல் போய் விட்டன. ஆனால், செல்போன் பயன்படுத்தினால் லொகேஷனை பார்த்து  இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்பதால் லெபனானில் பெரும்பாலோனார் பேஜருக்கு மாறியிருந்தனர்.

தைவானை சேர்ந்த கோல்ட் அப்பல்லோ நிறுவனம் இந்த பேஜர்களை தயாரித்து வழங்கியது. இவை, லெபனானுக்குள் நுழைவதற்கு முன்பு அவற்றில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இத்தகையை காரியங்களை செய்வதில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் திறன் பெற்றதாகும். இதனால்தான், பலரும் இஸ்ரேல் நாட்டின் வேலைதான் இதுவென்று சந்தேகிக்கின்றனர். ஆனால், இஸ்ரேல் அமைதி காக்கிறது.

அதாவது, அப்பல்லோ நிறுவனம் பேஜர்களை தயாரித்து கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தில் ஊடுருவி அந்த நிறுவனத்துக்கு தெரியாமலேயே பேஜர்களில் 3 கிராம் எடை கொண்ட குண்டுகளை மொசாட்  பொருத்தியதாக கூறப்படுகிறது.

லெபனானில் அந்த பேஜர்கள் பயன்பாட்டுக்கு வந்ததும்,  அதற்கான கோட் வேர்டை அனுப்பியதும் 3 ஆயிரம் பேஜர்களும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது சந்தேகம் கிளம்ப மற்றொரு காரணமும் உள்ளது.

பேஜர்கள் வெடிக்கும் முன்பு தெற்கு லெபனானுடன்  இஸ்ரேலின் எல்லையையொட்டியுள்ள இஸ்ரேல் மக்கள் அகற்றப்பட்டுள்ளனர். போர் ஏற்படலாம் என்பதை எதிர்பார்த்தே இஸ்ரேல் தன் மக்களை அகற்றியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த மக்கள் அகற்றப்பட்ட சில மணி நேரத்தில் லெபனானில் பேஜர்கள் வெடித்து சிதறியுள்ளன. இஸ்ரேலின்  மொசாட் வெளிநாட்டு மண்ணில் இதுபோன்ற தாக்குதலை நடத்துவதில் கை தேர்ந்த உளவு அமைப்பு என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

கடந்த 1972 ஆம் ஆண்டு முனீச் ஒலிம்பிக் போட்டியின் போது 11 இஸ்ரேலிய விளையாட்டு  வீரர்கள் பாலஸ்தீனிய அமைப்பால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.  அப்போது, இஸ்ரேல் பிரதமராக இருந்த கோல்டா மேயர் கடும் ஆவேசமானார். விளைவாக ‘கடவுளின் கோபம் ‘என்ற பெயரில் இஸ்ரேல் பழிவாங்கும் படலத்தை நடத்தியது.

விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் தொடர்புடைய பாலஸ்தீன விடுதலை அமைப்பை சேர்ந்தவர்களை 20 வருடங்கள் விரட்டி விரட்டி கொன்று விட்டே இஸ்ரேல் ஓய்ந்தது. தொழில் நுட்பம் வளராத  அந்த காலக்கட்டத்திலேயே பாலஸ்தீனிய அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் டெலிபோனில் பேசிக் கொண்டிருக்கும் போது, போன் வெடித்து சிதறி உயிரிழந்து போனார். இது, மொசாட் போட்ட பழிவாங்கும் திட்டமாகும்.

இது மொசாட் அமைப்பை பற்றிய சிறிய விளக்கம்தான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

மது வடலரா 2: விமர்சனம்!

துணை முதல்வர் பதவியா… யார் சொன்னது? – உதயநிதி கேள்வி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel