சவுக்கு சங்கர் குண்டாஸ் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணை 8 வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த மே 24ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பாலாஜி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கின் தகுதி அடிப்படையில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்தார்.
நீதிபதி பாலாஜி, ‘அரசுத் தரப்பு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.
இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதியிடம் சென்றது.
இவ்வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன், ‘ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்’ என்ற நீதிபதி பாலாஜியின் உத்தரவை ஏற்றுக் கொண்டார்.
அத்துடன் வழக்கை ஆட்கொணர்வு வழக்கை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி பரிந்துரைத்தார்.
அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் இன்று (ஜூன் 12) விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த வழக்கை வழக்கமான நடைமுறையின் படியே வரிசையாக தான் விசாரிக்கப்படும். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை முடிந்த பின்னரே இந்த மனு இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என தெரிவித்தனர்.
அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஜான் சத்யன் இடைக்காலமாக விடுதலை செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், இந்த கோரிக்கை ஏற்க தக்கதல்ல என கூறினார்.
இதனையடுத்து, இடைக்கால நிவாரணம் கோரி அரசிடம் மனு அளிக்க மனுதாரரான சவுக்கு சங்கரின் தாயாருக்கு அனுமதியளித்த நீதிபதிகள், தற்காலிகமாக விடுவிப்பதற்கான மனுவை பரிசீலித்து, தகுதிகள் மற்றும் சட்டத்தின்படி உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டனர்.
8 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு : ரஜினி, ஓபிஎஸிடம் கைகுலுக்கி உற்சாகமாக பேசிய மோடி
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு