எஸ்.சி. எஸ்.டி. வழக்குகள் : காவல்துறை அலட்சியம்!

Published On:

| By Selvam

எஸ்.சி., எஸ்.டி., வழக்குகளில் போலீசார் அலட்சியமாக செயல்படுவதாக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கமிஷன் தெரிவித்துள்ளது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கமிஷன், தமிழக போலீசார், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் முறையான விதிமுறைகளைக் கடைபிடிக்கவில்லை,

சாதி ரீதியிலான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியிலான தீர்வுகள் கிடைக்க வழிவகை செய்வதில்லை என்று தெரிவித்துள்ளது.

சாதி ரீதியிலான ஒடுக்குமுறை மற்றும் சாதிக் கலவரங்கள் தொடர்பான 1,100 மனுக்களை ஆய்வு செய்தபோது, 90 சதவிகிதம் மனுக்களுக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்யாமலும் தகுந்த விசாரணை நடத்தாமலும் உள்ளனர்.

இந்த வழக்குகளில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் வழக்கினுடைய விவரங்களை ஆராயாமலும், வழக்கைத் துரிதப்படுத்தாமலும் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான தகுந்த இழப்பீடு வழங்கப்படவில்லை. ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் இந்த வழக்குகளிலிருந்து தப்பித்து விடுகிறார்கள் என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கமிஷன் தெரிவித்துள்ளது

SC ST Cases Police negligence

அந்த கமிஷனின் தலைவர் நீதிபதி சிவகுமார் கூறும் போது, “இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், 1,115 மனுக்களை  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கமிஷன் பெற்றுள்ளது.

இதில் 900-க்கும் மேற்பட்ட மனுக்கள் ஆதி திராவிட மக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பந்தப்பட்டது. மற்றவை பழங்குடியின மக்களுக்கு எதிரானது. இதனடிப்படையில் பார்க்கும் போது காவல்துறை இந்த வழக்குகளை எவ்வளவு அலட்சியமாக கையாண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

மனுக்களைப் பெற்றவுடன் காவல் ஆய்வாளர் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர்களுக்குத் தகவல் சொல்லி, இந்த வழக்கில் டிஎஸ்பி அதிகாரத்தில் உள்ள ஒரு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும்.

முதற்கட்டமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நிவாரணங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஆனால் எஸ்.சி., எஸ்.டி., வழக்குகளில்  இதுபோன்ற எந்த நடைமுறையும் பின்பற்றவில்லை” என்று கூறியுள்ளார்.

செல்வம்

பட்டியல் மக்களுக்கு எதிரான சம்பவங்கள்: தலைமைச் செயலாளர், டிஜிபியிடம் தேசிய எஸ்.சி. கமிஷன் விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share