தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் இன்று(அக்டோபர் 10) தெரிவித்துள்ளது.
வருகிற 15ஆம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்த நிலையில், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (10-10-2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு அரேபிக் கடல், கர்நாடகா – கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வருகிற 12 ஆம் தேதி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் இன்று(அக்டோபர் 10) எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. காரைக்கால் பகுதியில் மிக லேசான மழை பதிவாகிய நிலையில், புதுவையில் வறண்ட வானிலை நிலவியது.
சென்னையை பொறுத்தவரை இன்று காலை சில இடங்களில் மிதமான மழை பெய்தது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக மதுரை நகரத்தில் 35.2 ° செல்சியஸும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 18.6 ° செல்சியஸும் நேற்று பதிவானது.
கனமழை எச்சரிக்கை
இந்நிலையில் இன்று, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், விழுப்புரம், கடலூர், மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, பெரம்பலூர், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
11.10.2024: திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோர பகுதிகள்
10.10.2024 முதல் 12.10.2024 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
13.10.2024 மற்றும் 14.10.2024; தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
12.10.2024 முதல் 14.10.2024 வரை: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மினவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
டாடா மறைவு: அரைக்கம்பத்தில் கொடிகள்… கொமதேக முடிவு!
”அடக்குமுறையை துணிவுடன் எதிர்கொண்டவர்”: முரசொலி செல்வம் மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்!