கெமிக்கல் வெள்ளம்: கர்ப்பிணியை மீட்ட விஜய் மக்கள் இயக்கம்!

Published On:

| By Selvam

vijay makkal iyakkam rescue pregnant lady

சென்னை எண்ணூர் பகுதியில் கெமிக்கல் ஆயில் கலந்த மழை நீரில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீட்ட சம்பவம் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை நகரமானது வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர், காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு நடிகர் விஜய் கேட்டுக்கொண்டார்.

அதன்படி வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் கொண்டு மீட்டெடுத்தல், நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவு வழங்குதல் போன்ற பணிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், சென்னை எண்ணூர் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவரை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் படகுகள் மூலம் மீட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எண்ணூர் பகுதியில் கெமிக்கல் கலந்த மழை நீரில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்க, அவரது குடும்பத்தினர் பலருக்கும் தொடர்பு கொண்டுள்ளனர்.

மீட்பு பணியில் ஈடுபட யாரும் வராததால், விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு தொடர்புகொண்டு நிலைமையை கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், கெமிக்கல் கலந்த மழை நீரில் நடந்து சென்றனர். அப்போது அவர்களது கை, கால்கள் முழுவதும் ஆயில் படிந்து கருப்பு நிறமானது.

அவர்கள் எடுத்து சென்ற நிவாரண பொருட்களிலும் கெமிக்கல் படிந்தது. தொடர்ந்து அவர்கள் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் வீட்டை சென்றடைந்து அவரை படகு மூலம் மீட்டனர்.

மீட்பு பணியில் ஈடுபட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் அந்த பகுதி மக்கள் சிலர், “குமட்டலாக இருக்கிறது. யாருமே இந்த பக்கம் வர மாட்றாங்க…ஓட்டுக்கேட்க மட்டும் வந்துர்றாங்க” என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னையில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும்!

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share