திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கவரப்பேட்டை அருகே நேற்று இரவு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சுமார் 13 பெட்டிகள் வரை தடம்புரண்டது. சரக்கு ரயிலின் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து ஏற்பட்டவுடன் பயங்கர சத்தம் கேட்டு,கவரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் காடு மேடுகளில் ஓடி வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உடனடியாக செயல்பட்டு ரயில் பயணிகளுக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
தற்போது, விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களில் கிடக்கும் ரயில் பெட்டிகளை அகற்றி, ரயில் பாதைகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், திருவள்ளூர் ரயில்வே ஊழியர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், காவல்துறையினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்
இன்று காலை கவரப்பேட்டையில் மழை பெய்ததால் சுமார் 20 நிமிடங்கள் சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியிருக்கிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதல்கட்டமாக தண்டவாளத்தில் 51பி பகுதியில் இன்டெர்லாக் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்..
இதில், டிராக் சேஞ்ச் பாயிண்ட் 51 பி அருகே, விஜயவாடா நோக்கி செல்லாமல் ரயில் லூப் லைனில் சென்றது தெரியவந்திருக்கிறது.
இந்த விபத்து தொடர்பாக கவரப்பேட்டை ரயில் நிலைய மேலாளர் மணிபிரசாத் பாபு அளித்த புகாரின் பேரில் கொருக்குபேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் தண்டவாளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், சதி வேலை காரணமாக இந்த விபத்து நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாகவும் ரயில்வே போலீசார் கூறுகின்றனர்.
ரயிலை இயக்கிய லோகோ பைலட் சுப்பிரமணியனிடம் போலீசார் விசாரித்ததில் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதால் தான் தொடர்ந்து ரயிலை இயக்கியதாக கூறியிருக்கிறார்.
தொடர்ந்து அவரிடமும் உதவி லோகோ பைலட் ராமவதாரிடமும் மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு சென்றது எப்படி என்று விசாரணை நடந்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வார இறுதியிலும் தங்கம் விலை உயர்வா? இன்று சவரன் எவ்வளவு?
கவரப்பேட்டை விபத்து : பயணிகளின் கவனத்துக்கு… ரத்தான ரயில்களின் விவரம்!