சிகிச்சையளிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் எப்படி இருக்கிறார்? அவர் தன்னிடம் என்ன கூறினார் என்பது குறித்து மருத்துவர் சொக்கலிங்கம் இன்று (அக்டோபர் 2) விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நேற்று காலை ஐந்து மணியளவில் மூத்த இதயநோய் நிபுணர் சாய் சதீஷ் தலைமையில் டிரான்ஸ்கத்தீடர் முறை சிகிச்சையளிக்கப்பட்டு, ரத்தநாளத்தில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டது.
இதுதொடர்பாக நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், “ரஜினிக்கு இதயத்தில் இருந்து பிரியும் முக்கிய தமனியான பெருநாடியின் சுவரில் வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சை அல்லாத, டிரான்ஸ்கத்தீடர் முறை மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது.
ரஜினி தற்போது நலமுடன் இருக்கிறார் என்பதை அவரது ரசிகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து அவரை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அதேபோன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் அவர் உடல் நலம்பெற்று பூரண குணத்துடன் வீடு திரும்ப வேண்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் விசிட்டிங் இதயநோய் மருத்துவராக பணிபுரிந்து வரும் மூத்த மருத்துவர் சொக்கலிங்கம் ரஜினியை இன்று காலை பரிசோதனை செய்தார்.
நான் நன்றாக இருக்கிறேன் என சொல்லிடுங்க!
பின்னர் ரஜினியின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ”ரஜினிக்கு நேற்று டிரான்ஸ்கத்தீடர் என்ற நவீன முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது. தற்போது நலமுடன் உள்ளார். நேற்று ஒருநாள் ஐசியூவில் இருந்த அவர், இன்று காலை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நாளை வீட்டுக்கு சென்று விடுவார்.
எனக்கு ரஜினி 50 வருட நண்பர். அவரிடம், ’எல்லோரும் உங்களைப் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று நான் சொன்னபோது, அவர் என் கையை பிடித்து “நீங்கள் தான் பார்க்கிறீர்களே, மக்களிடம் நான் நன்றாக இருக்கிறேன் என சொல்லிவிடுங்கள்” என்று தெரிவித்தார். இப்போதும் கூட அவர் தன்னுடைய ரசிகர்களை பற்றி தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
30 வயது மனிதர் போன்று இருக்கிறார்!
அவருக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். தன் மூலம் ரசிகர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக பல நேரங்களில் வெளிப்படையாக தனக்கு நேர்ந்ததை பற்றி பேசுவார்.
அவரை விட்டால் ’நாளைக்கே ஷூட்டிங் போகலாமா? என்று எங்களிடம் கேட்பார். ஆனால் இன்னும் 3 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம். அதன்பின்னர் அவர் முன்பு இருந்ததை விட இன்னும் உற்சாகமாக நிச்சயம் பணியாற்ற முடியும்.
தொடர்ந்து அவர் சில மருந்துகளை சாப்பிட்டு, ஓய்வெடுத்து வந்தார் என்றால் அவர் நன்றாகவே இருப்பார். 73 வயதான ரஜினி, இப்போதும் 30 வயது மனிதர் போன்று துடிப்பாக இயங்கி வருகிறார். அவர் நலமுடன் இருக்கிறார்” என மருத்துவர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா