திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த தீபத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சாமி தரிசனம் செய்வதற்காகத் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருவார்கள்.
தீபத் திருவிழாவின் 7வது நாளான நேற்று மகா தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பஞ்ச ஏஞஞமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், அண்ணாமலையார் பிரியாவிடை, உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதேரோட்டம் தொடங்கியது.

இந்த தேரோட்டத்தினை காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்றைய தேரோட்டம் நடைபெற்று முடிந்தது.
சிறப்புப் பேருந்துகள்
வரும் 6-ம் தேதி நடைபெறும் பரணி தீபம் மற்றும் மகா திருவிழாவிற்கு இந்த ஆண்டு சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வருவதற்கு வசதியாக தமிழகம் முழுவதிலும் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதோடு, சிறப்பு ரயில்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் டிக்கெட்
மகா தீப தரிசனத்திற்கு இன்று (டிசம்பர் 4) முதல் ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது. அதன்படி, வரும் 6-ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம் காண ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதிச் சீட்டுகளும், அன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் தரிசனம் காண ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதிச் சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் ஆயிரம் அனுமதிச் சீட்டுகளும் வழங்கப்பட உள்ளன.
இந்த அனுமதிச் சீட்டுகளை, https://annamalaiyar.hrce.tn.gov.in எனும் அண்ணாமலையார் திருக்கோயில் இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
போலீஸ் பாதுகாப்பு
கொரோனா காட்டுப்பாடுகள் நீங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விமரிசையாக நடைபெறும் தீபத் திருவிழாவிற்கு இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
ஆகையால் தீபத் திருவிழா அன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழு ஆகிய அனைத்துமே தயார் நிலையில் இருக்கின்றது.
தீபத்திருவிழா பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக, கட்டணமில்லா தொலைப்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டி, 1800 425 3657 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பத்தர்கள் தகவல்களைப் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
எ.வ. வேலு ஆய்வு
திருவண்ணாமலை தீபத் திருவிழா முன்னேற்பாடு நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், “கிரிவலத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கான அடிப்படை தேவைகள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அடையாள அட்டை வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே பரணி தீபம், மகா தீபம் மற்றும் மலையேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி 2,500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.
பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
பக்தர்கள் கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதியில்லை.
மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும், வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா