சென்னையின் புறநகர் பகுதிகளில் போலீசார் கஞ்சா வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அந்தவகையில், தாம்பரத்தில் இன்று (அக்டோபர் 28) 150 கிலோ கஞ்சா கடத்திய இருவரை தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது…
“சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவதாக தொடர்ந்து தகவல்கள் வந்தது. சமீபத்தில் பிரபலமான ஒரு கல்லூரி அருகில் மாணவர்கள் தங்கியிருந்த வீடுகளில் மாஸ் ரெய்டு நடத்தி, கஞ்சா, கஞ்சா சாக்லேட் உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து கஞ்சாவுக்கு எதிரான வேட்டையைத் தீவிரப்படுத்தனர். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி ஜான் விக்டர், இன்ஸ்பெக்டர் நடராஜ் ஆகியோர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், வட மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி தமிழகத்திற்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதற்காக வட மாநிலத்தில் இருந்து தமிழத்திற்கு வந்து வேலை செய்யும் இளைஞர்களை பயன்படுத்தியுள்ளனர்.
இவர்களை பிடிப்பதற்காக செல்போன் சிக்னல், கஞ்சாவை எப்படி டெலிவரி செய்கிறார்கள், யார் யாரை சந்திக்கிறார்கள், எப்படி கடத்துகிறார்கள் என்று போலீஸ் இன்ஃபார்மர்கள் மூலம் ஃபாலோ செய்து வந்தனர்.
சமீபத்தில் போலீஸ் இன்ஃபார்மர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் தாம்பரம் உய்யாளி அம்மன் கோவில் அருகே ஐந்து கிலோ 300 கிராம் கஞ்சாவை கைமாற்ற இருப்பதாக தகவல் வந்தது. உடனடியாக அங்கு விரைந்த போலீஸ், அந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் ஒடிசாவைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த ஐந்து கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
இந்தநிலையில், இன்று காலை தாம்பரத்தில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த TN 92, 5319 என்ற பதிவெஎண் கொண்ட சரக்கு வாகனத்தை ஆய்வு செய்தனர். அந்த வாகனத்தில் தூத்துக்குடி மாவட்டம் முக்காணியைச் சேர்ந்த முத்துவேல் பாண்டியன், பழையகாயலைச் சேர்ந்த சந்திரகுமார் ஆகியோர் கடத்தி வந்த 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததாக வாக்குமூலம் கொடுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். ஆந்திராவிற்கு ஒரு டீம் விரைந்துள்ளது” என்கிறார்கள்.
மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கத்தை தவிர்க்க, தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் போதைப் பொருள்களை கடத்துபவர்களுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: விஜய் எந்தெந்த ஏரியாவில் கில்லி… மாநாட்டு கூட்டம் சொல்லும் சீக்ரெட் டேட்டா!
ஆட்சியில் பங்கு… திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்தும் உத்தி – விஜய்யை விமர்சித்த திருமா