கடன் வாங்க கடன்… பல்லடத்தில் பலியான அசாம் பிஞ்சு!

Published On:

| By indhu

Suicide attempt with laborer's family - girl killed

பல்லடம் அருகே ஆன்லைன் கடன் பெற பணம் கட்டி ஏமாந்த கூலித் தொழிலாளி குடும்பத்துடன் நேற்று (மே 30) தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதில் இன்று (மே 31) சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுமி உயிரிழந்துவிட்டார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜீவ், அவரது மனைவி விஜி மற்றும் 6 வயது மகள் வின்சிலின். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளம் என்ற பகுதியில் குடும்பத்துடன் தங்கி, கரடிவாவியில் உள்ள ஒரு நூல் மில்லில் வேலை செய்து வந்துள்ளார்.

ராஜீவ் கடந்த சில தினங்களுக்கு முன்பு முகநூலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அதில் கடன் உதவி தொடர்பான ஒரு லிங்க் வந்துள்ளது.

அந்த லிங்க் மூலமாக ஒரு கடனுதவி செயலியை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துள்ளார். பதிவிறக்கம் செய்தவுடன் ஒரு எண்ணில் இருந்து ராஜீவிற்கு அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசியவர், ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என்றும், அதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் நீங்கள் பெறும் கடன் தொகையை பொறுத்து அதற்கேற்ற முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய ராஜீவ், தனது நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் கடன் பெற்று அந்த கடன் செயலியில் கட்டியுள்ளார். பின்னர் அவர்களிடமிருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை.

இதையடுத்து, கடன் கொடுத்த நண்பர்களும், உறவினர்களும் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டுள்ளனர்.

இதனால், என்ன செய்வதென்று தெரியாத ராஜீவ், குடும்பத்துடன் நேற்று இரவு எலி மருந்து சாப்பிட்டு விட்டு கரடிவாவி பேருந்து நிலையத்திற்கு அருகில் நின்றுள்ளார்.

அப்போது  6 வயது சிறுமி வின்சிலின் வாந்தி எடுப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் 108-க்கு அழைத்து பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரும், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இரவு முழுவதும் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டும், 6 வயது சிறுமி வின்சிலின் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துவிட்டார். ராஜீவிற்கும், அவரது மனைவிக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ராமநாயக்கம்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இப்போது வெள்ளத்துரை… அடுத்து முருகன்? கடைசி நேர சஸ்பெண்ட் லிஸ்ட்!

பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் மீண்டும் தீ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share