இன்றுடன் (நவம்பர் 30) முடிவடைய இருந்த சேலம் புத்தகத் திருவிழா இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) இணைந்து சேலத்தில் மாபெரும் புத்தகத் திருவிழாவை நடத்திவருகின்றன.
இந்தப் புத்தகத் திருவிழாவை, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் புத்தகத் திருவிழாவை வந்து ஆர்வமுடன் பார்வையிடுவதுடன் புத்தகங்களையும் வாங்கிச் செல்கின்றனர்.
தினமும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்புத்தகத் திருவிழாவை, இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டதுடன், சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578-க்கு விற்பனையாகியுள்ளன. இந்நிலையில், சேலம் புத்தகத் திருவிழாவை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று புத்தக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி இருந்தனர்.
இதையடுத்து, இன்றுடன் (நவம்பர் 30) நிறைவடைய இருந்த சேலம் புத்தகத் திருவிழா டிசம்பர் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
புத்தக வாசிப்பாளர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சேலம் புத்தக கண்காட்சி வருகிற 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்