தமிழ்நாட்டில் 18 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் 107, மதுரை நகரம் 105, தூத்துக்குடி 104, கடலூர், ஈரோட்டில் தலா 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும், பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இதற்கான காரணம் குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே வேளையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.
ஓரிரு இடங்களில் இயல்பில் இருந்து 2 – 4 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக இந்த நிலை ஏற்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 90 – 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 82 – 84 டிகிரி பாரன்ஹீட் ஒட்டியே இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூலை 3ஆம் தேதி, உலக அளவில் மிகவும் வெப்பமான நாளாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அமெரிக்காவின் தேசிய சுற்றுச்சூழல் கணிப்பு ஆய்வகம் வெளியிட்டுள்ளது.
உலகின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் (62.62 டிகிரி பாரன்ஹீட்) ஆக அதிகரித்துள்ளது.
2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், உலகின் அதிக வெப்பநிலையாக 16.92 டிகிரி செல்சியஸ் பதிவானது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 3ஆம் தேதி பதிவான வெப்பநிலை, அதை விஞ்சியுள்ளது. “இந்த வெப்பநிலையானது நாம் கொண்டாட வேண்டிய மைல்கல் என நினைக்க வேண்டாம்.
உண்மையில் இது மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்குமான மரண ஒலி” என்று காலநிலை மாற்றம் குறித்து லண்டனின் கிராந்தம் இன்ஸ்டிட்யூட் ஃபார் க்ளைமேட் சேஞ்ச் கல்லூரியின் சூழலியல் விஞ்ஞானி ஃப்ரெட்ரிக் ஆட்டோ எச்சரித்துள்ளார்.
“உலக அளவில் கார்பன் மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதனால், பருவநிலை மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த உச்சபட்ச வெப்பநிலையானது நேரடியாக எல் நினோ தாக்கத்தின் விளைவுதான். இப்படியே சென்றால், இவ்வுலகில் மனிதர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்” என்று கவலை தெரிவிக்கின்றனர் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள்.
ராஜ்
ஜியோபுக் அறிமுகம் : லேப்டாப் இறக்குமதிக்கு கட்டுப்பாடு!- இது தற்செயல்தானா?