பத்திரப்பதிவை பொதுமக்கள் எளிதாக மேற்கொள்ளும் வகையில் ஸ்டார் 3.0 திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பத்திரப்பதிவுத்துறையில், நவீன தொழில்நுட்ப மேம்பாடு “ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம்” குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சென்னையில் நேற்று தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “பதிவுத்துறையில் கணினிமயமாக்கல் என்கிற “ஸ்டார்” திட்டம் 2000-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டது.
முதன்முதலில் 23 அலுவலகங்களில் தொடங்கப்பட்ட கணினிமயமாக்கல் திட்டம் பின்னர் படிப்படியாக அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் விரிவாக்கப்பட்டது.
நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களிடம் எளிய அணுகுமுறை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு புதிய மேம்படுத்தப்பட்ட வலை அடிப்படையிலான ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.
பதிவுத்துறையில் தனித்துவமான வசதிகளுடன், அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழி பதிவை எளிமையாக்கும் விதமாக ஸ்டார் 3.0 என்னும் புதிய மென்பொருள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளில் செயற்கை நுண்ணறிவு, பொதுமக்கள் அலுவலகம் வராமலேயே சேவைகளை பெறுதல், கிளவுட் தொழில் நுட்பம், கைபேசி செயலி உள்ளிட்ட சேவைகள் கொண்டுவரப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளை தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் கருத்தரங்கில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்” என்று தெரிவித்தார்.
இந்த கருத்தரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பத்திரப்பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் தேசிய அளவிலான தகவல் தொழில் நுட்ப முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காலை உணவு திட்டம்: சென்னை மாநகராட்சி விளக்கம்!
பரந்தூர் விமான நிலையம்: குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் போராட்டம்!