100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் ரஜினி, இளையராஜா

Published On:

| By christopher

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று (ஏப்ரல் 30) நடைபெறும் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்க ரஜினிகாந்த், இளையராஜா உட்பட பல்வேறு துறை சார்ந்த 200 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்‘ வானொலியில் உரை நிகழ்ச்சி கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி முதன்முறையாக ஒலிபரப்பானது. இதற்கு நாட்டு மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனையடுத்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமை பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பாகிறது.

இதுவரை ஒலிபரப்பாகி உள்ள 99 மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு குறித்தே பிரதமர் மோடி அதிகம் பேசி உள்ளார்.

குறிப்பாக தமிழ்மொழியின் பெருமை, தமிழ் கலாசாரம், திருக்குறளின் சிறப்பம்சங்கள், உத்திரமேரூர் கல்வெட்டு, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், வில்லுப்பாட்டு,

தஞ்சாவூர் பொம்மை என மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு குறித்து பிரதமர் மோடி பேசியது ஏராளம். இன்றும் தமிழ்நாடு, தமிழர்கள் குறித்து அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயத்தை நாட்டு மக்கள் இன்று கேட்க உள்ளனர்.

இதனை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்க ரஜினிகாந்த், இளையராஜா உட்பட பல்வேறு துறை சார்ந்த 200 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதே போன்று தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலும் ஆளுநர் மாளிகையில், மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயத்திற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது தொகுப்பை சிறப்பிக்கும் வகையில், மைக்ரோபோனுடன் கூடிய ஒலி அலையை குறிக்கும் வகையில் சின்னம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய நிதித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் புகழ்பெற்றுள்ளது.

பிரதமர் மோடி பேசும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது நிகழ்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திலும் மோடியின் 100 ஆவது மனதின் குரல் உரையை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

தஞ்சையில் நாளை சித்திரை தேரோட்டம்!

கிச்சன் கீர்த்தனா: தோசைக்குத் தனியாக மாவு அரைக்க வேண்டுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share