நா.மணி
கல்லூரி வளாகத்திற்கு வெளியில் முதல் முதலாக வாசிப்பை சுவாசித்து பார்க்கும் முயற்சி. எங்கள் துறை சார்பில் மட்டுமல்ல, எங்கள் கல்லூரி வரலாற்றில் அப்படியான முதல் முயற்சி. இடம் கல்லூரியிலிருந்து ஆறு கல் தொலைவில் இருக்கும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம். வாசிப்புக்கு தேர்வு செய்த நூல் “பூமிக்கு யார் சொந்தம்?”.
தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் செ. கார்த்திகேயன் செ.கா என்ற பெயரில் பல்வேறு தருணங்களில் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரை தொகுப்பு நூல். பெருந்துறையில் உருவாகியிருக்கும் புத்தகக் கடை டாட் காம் வெளிக் கொண்டு வந்த நூல். இந்த நூலை நூலாசிரியருக்காக தேர்வு செய்தோம். ஏன்? அவர் ஒரு பறவை நோக்கர். சூழலியல் செயல்பாட்டாளர்.
பறவைகள் மத்தியில் வாசிப்பு!
அவரது நூலைத் தேர்வு செய்வதின் வழியாக நூலாசிரியரோடு நேரிடையாக பங்கேற்பை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு. அதிகாலையில் பறவை நோக்கல் செயல்பாட்டிற்கு வழிகாட்ட, பறவைகளை அடையாளம் கண்டு மாணவர்களுக்கு கூறவும் இவர் ஒருவரே போதும். இவற்றைத் தாண்டி வாசிப்பிற்கான மிகச் சிறந்த நூல் என்பது தனி.
கல்லூரிக்கு அருகில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் நவம்பர் மாதத்தில் ஓர் வாசிப்பு முகாம் நடத்த வேண்டும் என்பது இந்த ஆண்டின் துவக்கத்தில் புத்தாக்க பயிற்சி வகுப்புகளை நடத்திய போதே திட்டமிட்ட ஒன்று. ஆனால் அது தள்ளி தள்ளி போய்க் கெண்டிருந்தது. அதனை தொடர்ந்து நினைவூட்டும் செய்து தேதியை நிர்ணயம் செய்ய வைத்தது முதலாம் ஆண்டிற்குப் பொறுப்பு பேராசிரியராக பணியாற்றி வரும் அருள் ஜோதி அவர்கள்.
தேதி தீர்மானிக்கப்பட்டது. அடுத்து, மாவட்ட வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். பல்வேறு கூடுதல் பொறுப்புகளை எடுத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து திரியும் சூழ்நிலையில் எமக்கு அடுத்த நிலையில் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் பாரி, அனுமதி கடிதம் தயார் செய்து வனத்துறைக்கு நேரில் சென்று அதனை சமர்ப்பித்தார்.
முதல் வெற்றி!
பறவைகள் சரணாலயம் வாசிப்புக்கும் ஏற்ற சரணாலயம் என்று தேர்வு செய்து, அதிகாலை ஆறுமணிக்கு சரணாலயம் வந்து விட வேண்டும் என்ற அறிவிப்பின் படி எத்தனை பேர் வந்து சேருவார்கள் என்ற யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அதிகாலையில் ஆறு மணி என்பதற்கு பதிலாக 6.20 மணிக்கு தான் நாம் பறவைகள் சரணாலயம் சென்று அடைந்தோம்.
ஆறுமணிக்கு முன்பே பறவைகள் சரணாலயம் வந்தடைந்த மாணவர்கள் மூன்று பேர். அப்படி வந்த மூன்று பேரில் முதன்மையானவர் அந்தியூரிலிருந்து வந்த மாணவர். நள்ளிரவு இரண்டு மணிக்கு வீட்டில் புறப்பட்டு ஆறுமணிக்கு முன்பே பறவைகள் சரணாலயம் வந்து சேர்ந்தது முகாமின் முதல் வெற்றியாகப்பட்டது. 6.30 மணிக்குள் ஐம்பது விழுக்காடு மாணவர்கள், ஏழு மணிக்கெல்லாம் என்பது விழுக்காடு மாணவர்கள் வந்து சேர்ந்து விட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் தங்கி ஓர் வாசிப்பு முகாமில் பங்கு பெற்றது உட்பட பறவை நோக்கிற்காக பங்கேற்றது உண்டு. இப்போது நான் பார்க்கும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் முற்றிலும் புதிய வடிவமைப்பைப் பெற்றிருந்தது. பறவைகளுக்கு பாதுகாப்பு, பறவை நோக்கங்களுக்காக போதுமான வசதிகள் என உள்ளம் கவர்ந்தது. அடடா ! இங்கேயே இருந்து கொண்டே தவற விட்டு விட்டோமே என்று உணர்வை உருவாக்கியது.
தொடர் வாசிப்பை முன்னெடுத்து, எப்படியேனும் இந்த ஆண்டு முதல், படிக்க வரும் மாணவர்கள் மத்தியில் வாசிப்பின் மீது வகை தொகையற்ற வாஞ்சையை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், தொடக்கநிலை வாசிப்பு முயற்சிகளில் மாணவர்களின் தொய்வு அல்லது ஒத்துழைப்பு இன்மை ஆகியவற்றால் மிக நீண்ட நேரம் வாசிப்பின் முக்கியத்துவம் மேன்மை குறித்து பேசியது உண்டு. கொஞ்சம் கடும் சொற்கள் பிரயோகமும் அதில் உண்டு.
கடைசியாக மேற்கொண்ட வாசிப்பு முயற்சியில் எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் இணையத்தில் கிடைக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து வாசித்தல் அதன் மீதான உரையாடல் என்று திட்டமிட்டோம். இதனையும் இராஜா அவர்களை கொண்டு ஒருங்கிணைத்தோம். நாம் எடுத்துக் கொண்ட இலக்கு நிறைவேறும். பெரும்பாலான மாணவர்கள் வாசிப்பு வாசலுக்கான திறவுகோலை செம்மையாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையை உருவாகிய கூட்டம். மாணவர்கள் எஸ் இராமகிருஷ்ணன் இணைய தளம் தாண்டியும் கதைகளை வாசித்து விட்டு வந்து பகிர்ந்து கொண்டதில் ஆச்சரியம் . அதுவும் குபரா, ஜெயகாந்தன் என படித்து விட்டு வந்து பேசியதில் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி.
வெள்ளோடு பறவைகள் சரணாலய வாசிப்பு முகாமின் மீது நம்பிக்கை வேர் விட்டது. ஆனால் பறவை நோக்கல் எப்படி இருக்கும்? அவர்களுக்கு என்ன பார்வை? இயற்கை சார்ந்த நூல்களின் மீதான அவர்களது வாசிப்பு எப்படி இருக்கும்? இந்தக் கேள்விகள் துளைத்துக் கொண்டேதான் இருந்தது.
மாணவர்களின் ஆர்வம்
ஐயப்பாடுகளோடு முகாமில் 7.15 மணிக்கு எல்லோரும் ஐக்கியம் ஆனோம். வனத்துறை சார்பில் பறவைகளை அடையாளம் காண கொடுத்த இரண்டு பைனாகுலர்கள், இரண்டு வண்ணப் படங்கள், கார்த்திகேயன் எடுத்து வந்திருந்த தமிழக பறவைகள் நூல், வண்ண அட்டைகள் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டன. முதலில் மாணவர்கள் மாணவிகள் என இரண்டு குழுவாக பிரித்தார். பறவை நோக்கிற்கு பயன்படும் பொருட்களையும் இரண்டாகப் பிரித்து இரண்டு குழுக்களுக்கும் கொடுத்தார்.
எங்கள் இருவர் எண்ணங்களையும் தவிடுபொடியாக்கி டக் டக் என பறவைகளை அடையாளம் கண்டனர். அதிகாலையில் உணவு உண்டு கல்லூரி வரும் மாணவர்கள் காலை உணவை பத்து மணி வரை மறந்தே விட்டார்கள். மாணவர்களின் உற்சாகம், பறவைகளை கண்டறியும் திறன், வேகம், ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு தொடர்ந்து பறவை நோக்கலை ஊக்குவித்தால் என்ன என்று தோன்றியது. உடனடி செயல் திட்டம் தயாரானது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திகேயன் தனது ஏழு வயது மற்றும் ஐந்து வயது பாலகர்களோடு தொடர் பறவை நோக்கலில் பங்கேற்று வருகிறார். அந்த வாராந்திர பறவை நோக்கலில் ஆர்வமுடன் வரும் மாணவர்களை இணைத்துக் கொள்ளுதல், அறிவியல் இயக்கத்திலும் பொது வெளியிலும் நம்மோடு இணைந்து பயணிக்க வருவோரை இணைத்து ஒரு வாட்ஸ்அப் குழுவாக்கி அடுத்த வாரமே பணிகளை துவக்குதல் என்ற ஆலோசனையை அமலாக்கம் செய்யும் செயல் திட்டம் உதயமானது.
இப்போது காலை உணவு இடைவேளைக்கு பிறகு, மொத்த மாணவர்கள் பதினொரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒரு குழுவில் ஐவர். ஒருவர் குழு தலைவர். குழு தலைவரிடம் “பூமிக்கு யார் சொந்தம்” ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குழு உறுப்பினர்களும் வாசிப்பு முகாமில் கலந்து கொள்ளும் முன்னர், எவ்வளவு வாசித்தார்கள் என்பது கணக்கில் கொள்ளப்படவில்லை. ஒரு குழுவிற்கு ஒரு புத்தகம். ஒரு குழுவிற்கு ஓர் அத்தியாயம் என பிரித்து கொடுக்கப்பட்டது. இரண்டு மணி நேரம் கூட்டு வாசிப்புக்கு பின்னர் நூல் மதிப்புரை சுற்று தொடங்கியது.
இந்தத் தருணங்களை, பறவை நோக்கல் மற்றும் வாசிப்பு முகாமை ஒருங்கிணைக்க நாங்கள் அழைத்து வந்திருந்த கார்த்திக் மொழியிலேயே முகாம் மதிப்பீட்டைக் கேளுங்கள்.
“மாங்குயில் வரவேற்ற மனமகிழ்ந்த நிகழ்வு.
ஈரோடு கலை அறிவியல் கல்லூரியின் பொருளியல் துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் 50 பேர் சேர்ந்து ஒரு புத்தகம் வாசிக்கப் போகிறார்கள். நீங்க வந்து காலை பறவைகள் அவதானித்தல் நிகழ்வை ஒருங்கிணைத்துத் தரவேண்டும் என்கிற அன்புக் கட்டளை பேரா.மணி அவர்களால் எனக்கு பணிக்கப்பட்டது.
நானும் வழக்கமான முதலாம் ஆண்டு மாணவர்கள் மீதான பொதுப்புத்தியோடும் , பொருளியல் துறைக்கும் பறவை அவதானிப்புக்கும் என்ன பெரிய தொடர்பு இருந்திடப் போகிறது என்கிற குறை எதிர்பார்ப்புடனேதான்(கடந்த கால ஒருங்கிணைப்புகளில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால்) அதிகாலையில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் சென்றடைந்தேன். உடன் அவர்களைப் பங்கேற்க வைப்பதற்கான சில படநூல்கள் , விளக்க அட்டைகள் எல்லாம் எடுத்துச் சென்றிருந்தேன்.
முதல் பாலே சிக்சர்
எங்களுக்கு முன்னரே துறைத்தலைவர் பேராசிரியர் 6:20 ற்கே அங்கு வந்துவிட்டார். ஒவ்வொருவராக வரத் தொடங்கி எல்லாரும் ஓர் அணியாகி பறவை உற்றுநோக்கலைத் துவங்கிய பொழுது மணி 7 ஆனது. எப்படியும் 8 மணிக்குள் முடிந்துவிடும் என்கிற எதிர்பார்ப்புடன் நடக்கத் தொடங்கிய என்னை, மாங்குயில்கள் இரண்டு, தமது மஞ்சள் சிறகுகளை விரித்து ஆட்டியவாறே வரவேற்றது. இரண்டு இருகண்நோக்கிகள் , காப்பகப் பறவைகள் விளக்கப்படம் , ஊர்ப்புற பறவைகள் கையேடு மாணவ மாணவிகளுக்கு முறையே பகிர்ந்தளிக்கப்பட்டன.
முதல் பாலிலே சிக்சர் என்பது போல , முதல் பாயிண்ட்லயே அவர்களுடைய ஆர்ப்பரிப்பான ஆர்வம் என்ன என்பதை மிக சீக்கிரமாக என்னால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. இரு குழுவிற்கும் இடையே போட்டி போட்டுக்கொண்டு அங்கிருந்த பறவைகளை அடையாளங்கண்டு கொண்டது சுவையாக இருந்தது. இதே சுவையுடன், இடையிடையே சுவாரஸ்யமான கேள்வி பதில்களோடு சென்ற எங்கள் பயணம் முடிக்க 10 மணி ஆகிவிட்டது. காகம் , மைனா, கிளியைத் தவிர வேறெந்த பறவைகளின் பெயர்களையும் தெரியாது ,வந்திருந்த மாணவர்கள் , உற்றுநோக்கலின் முடிவில் 30 பறவைகளை, அவர்களது சுய பங்கேற்பின் வழியே அடையாளங்கண்டு இருந்தது மகிழ்ச்சியாகவும் , நம்பிக்கைக்குரியதாகவும் இருந்தது.
இவர்களது இந்த ஆர்வமுள்ள பங்கெடுப்பை வளர்த்தெடுப்பதற்காக TNSF – Nature Club ஒன்று உருவாக்குவதற்கு இச்செயல்பாடு வித்திட்டுவிட்டது. நேற்று தொடங்கிய இக்குழுவில் நண்பர்கள் தன்னார்வமாக இணைந்து கொண்டே வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
அடுத்ததாக காலை உணவு. காலை உணவு முடிந்த பின் நூல் வாசிப்பிற்காக குழுக்களாகப் பிரிந்து சென்றனர்.
13 அத்தியாயங்கள் கொண்ட “பூமிக்கு யார் சொந்தம்?” என்கிற நூலை , 13 குழுக்களாகப் பிரிந்து வாசிக்கத் தொடங்கினர். இந்நிகழ்வை முதலாம் ஆண்டு பொறுப்பாளர் பேரா.அருள்ஜோதி அவர்கள் முழுமையாக ஒருங்கிணைத்தார். புரியாத கட்டுரைகள் , கடினமான கட்டுரைகளுள் நுழைவதற்கான அறிமுகங்கள் நூலாசிரியரால் கொடுக்கப்பட்டன. குழுவாரியாக வாசிப்பு அனுபவங்கள் பகிர்வது குறித்த சில வழிகாட்டுதல்களும் பகிரப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பறவைகள் சரணாலயத்திற்கு வந்து போவோர்க்கு இப்படி ஒரு நிகழ்வைப் பார்த்ததில் ஏற்பட்ட வியப்பை , அவர்களது கண்களிலும் உடல்மொழியிலுமே தெளிவாகத் தெரிந்தது. பலரும் வந்து ஆச்சரியமாக விசாரித்து சென்றனர். இளைஞர்கள் புத்தகம் படிப்பதைப் பார்ப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளதே என்றும் , எந்தக் கல்லூரி என்றும் கேட்டுவிட்டு , சிலர் புகைப்படம் கூட எடுத்துச் சென்றனர்.
குழுக்களில் படித்துமுடித்தபின் பகிர்வதற்கான வாய்ப்பு வந்தது. பின்னர் உடனடியாக கூட்ட அரங்கை வண்ணத்துப்பூச்சி பூங்காவைச் சுற்றி அமைத்தோம். சிறப்பு அழைப்பாளரக நிகழ்வு முடியும் வரை வண்ணமயில் ஒன்று எங்களிடையே வலம் வந்து கொண்டேயிருந்தது.
இடையிடையே பெய்த மழை போல , அங்கிருந்த தெளிப்பான் எங்களையும்,வண்ணத்துப்பூச்சி பூங்காவையும் சுற்றி சுற்றி குளிர்வித்துக் கொண்டேயிருந்ததும் ஒருவகையான
ஏகாந்த மனநிலையை உருவாக்கியது. இந்நிகழ்வில் நூலின் பதிப்பாசிரியர் கோபாலகிருஷ்ணன் ஆர்வமுடன் பங்கெடுத்துக் கொண்டார்.
முதலில் நாங்கள் பகிர்கிறோம் என்று வழக்கம்போல பெண்கள் பிரிவில் 4 வது அணி எழுந்து வந்தனர் . அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியாக முன் வந்து தமது பங்களிப்பை சிறப்பாக செய்தனர். டார்வின் எழுதிய கதை என்றும் , சீன் போடாம வாழப்பழகுங்க என்று அட்டன்பரோ சொல்றார் என்றும், ஒழித்துக்கொண்டேயிருப்பதுதான் மனுச வேலை என்றும், வறீதையானு ஒருத்தரை இந்த புத்தகம் மூலம் தான் தெரிஞ்சுகிட்டோம் என்றும், அம்போசெலியின் அழுகல்வாடையை கேட்போருக்கும் கடத்திய பாங்கு என்று ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு விதமாக பகிர்ந்து கொண்டது நிகழ்வை சுவாரஸ்யமாக்கிக் கொண்டே சென்றது.
இருப்பதிலே கடினமான கட்டுரை என்று நூலாசிரியர் கருதிய “மார்க்ஸ் , எங்கெல்ஸ் வரிசையில் டார்வின்” என்கிற கட்டுரையை மாணவர் வடிவழகி , தெளிவாக சிறப்பாக , அதன் உள்ளடக்கத்தை நேர்த்தியாக உள்வாங்கிப் பகிர்ந்த விதம், அனைவரையும் வியப்படையச் செய்தது.
பலருக்கும் இதுதான் முதல் மேடை. ஆனால் ஒருவர் கூட பேசத் தயங்கவில்லை. எல்லோரும் ஏதேனும் ஒருவகையில் தம்முடைய கருத்துகளை சிரித்துக் கொண்டே ஜாலியாகப் பகிர்ந்து கொண்டதற்கான காரணம் நிகழ்வு நடந்த இடம் என்றுதான் நான் நினைக்கிறேன். இயற்கையின் மடியில், ரம்மியமான சூழலில், பறவைகளின் தொடர் கீச்சுகளின் இடையே ஒருவர் எப்படி தனது சுயத்தை இழக்கமுடியும்? அது இந்நிகழ்வைக் காண்போருக்கும் பொருந்தும்தானே? பலரும் நின்று பார்த்தும் கேட்டும் சென்று கொண்டிருந்த பொழுது, ஒருவர் மட்டும் நீண்ட நேரமாக நின்று கவனித்துவிட்டு, பதிப்பாளரிடம் சென்று நிகழ்வு குறித்து கேட்டு, அனைவரையும் பாராட்டிச் சென்றிருக்கிறார். தன்னையும் இதுபோன்ற செயல்களில் இணைத்துக் கொள்ள விரும்பி தமது எண்ணைப் பகிர்ந்து சென்றிருக்கிறார். அதுவே இந்நிகழ்விற்கு கிடைத்த வெற்றியென நான் கருதுகிறேன்.
நம்பிக்கை பிறந்தது
பின்னர் நூலாசிரியரின் ஏற்புரையுடன் இந்நிகழ்வு முடிந்தாயினும் , அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கான நம்பிக்கை தருகிற துவக்கப்புள்ளியாக இச்சந்திப்பு அமைந்தது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
இக்கால இளைஞர்கள் நம்பிக்கைகளைத் தகர்த்தெறிவதில் வல்லவர்கள். பல நேரங்களில் நாம் அவர்கள் மீது வைத்திருக்கிற பொதுப்புத்திப் பார்வையைக் கூட அடித்துத் தகர்ப்பதிலும் கூட அவர்கள் வல்லவர்கள் என்பதை நேற்றைய நிகழ்வின் வழி நான் கற்றுக் கொண்ட பாடம்.
நூலாசிரியரின் அனுபவத்துடன் நிறைவாக, ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால், இந்த வாசிப்பு செயல் திட்டம் மூன்று ஆண்டுகள் செவ்வனே நிறைவேறும், மிகச் சிறந்த முன் மாதிரியை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. தற்போது முதல் ஆண்டு படிக்கும் மாணவர்களில் பெரும் பகுதி, தங்கள் வாழ்வில் இரண்டறக் கலந்ததாக வாசிப்பை இறுகப் பற்றிக் கொள்வார்கள் நம்பிக்கை விதைகள் மனதில் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது.
கட்டுரையாளர் குறிப்பு
நா. மணி, பேராசிரியர் மற்றும் தலைவர், பொருளாதாரத்துறை கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்… உள்ளே வரவே முடியாது! – பகுதி 2
எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்… ஆனால் மீண்டும் உள்ளே வர முடியுமா? – பகுதி 1
இனியேனும் பணியிடத்திற்கு ஏற்ற உடைகள் பரவலாகட்டும்!
Heatwave: இந்த ‘மாவட்டத்துல’ தான் சூரியன் ரொம்ப உக்கிரமா இருக்காம்!
Ambika: ‘அமைதியாக இருங்கள்’… குஷ்பூவிற்கு ‘பதிலடி’ கொடுத்த அம்பிகா