எண்ணூர் கொசஸ்தலை ஆறு மற்றும் அதனை சுற்றி மக்கள் வசிக்கும் பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளத்தில் எண்ணெய் கழிவு கலந்துள்ளதால் அங்கு சிக்கியுள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். oil waste mixed with flood in ennore
சென்னை எண்ணூரில் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் பல உள்ளன. இதன் அருகில் கொசஸ்தலை ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் கடலில் கலக்கும் முகத்துவாரம் உள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் அங்குள்ள எண்ணெய் நிறுவனங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் தற்போது அந்த நிறுவனங்களில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவு கொசஸ்தலை ஆறு மற்றும் வெள்ளத்தில் கலந்து சுமார் 16 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவியுள்ளது.
கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள எர்ணாவூர், கிரிஜா நகர் காட்டுக்குப்பம் போன்ற பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள 4 அடி உயர வெள்ளத்திலும் எண்ணெய் கழிவு கலந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எண்ணெய் கழிவுகளால் காட்டுக்குப்பம் கொசஸ்தலை முகத்துவாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் பெரும் சேதமடைந்துள்ளன.
மேலும் புயல் மற்றும் கனமழை நின்று 3 நாட்களாகியும் வடசென்னையில் மீட்பு பணிகள் மிக மெதுவாகவே நடைபெற்று வருகின்றன. இதனால் தற்போது வரை இங்கு வீடுகளை சூழ்ந்துள்ள எண்ணெய் கழிவு கலந்த வெள்ளத்தை அகற்றும் பணிகளும் இதுவரை தொடங்கவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “வெள்ளத்தில் எண்ணெய் கழிவுகளை கலந்து விடுவது இது முதல்முறையல்ல. இதுபோன்று ஏற்கெனவே பலமுறை இங்குள்ள சிபிசிஎல் நிறுவனம் வேண்டுமென்றே செய்துள்ளது.
இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் சிபிசிஎல் நிறுவனத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு அரசு இதற்கு நிரந்தர தீர்வை அளிக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அங்குள்ள மக்கள் தொடர்பு கொண்டு உதவி கேட்டதன் பேரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சென்ற நிலையில், அப்பகுதியின் அவல நிலையை சமூகவலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை இன்று (டிசம்பர் 7) தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் மோகன் ஜி வேதனை தெரிவித்துள்ளார்.
எண்ணூர் cpcl அருகே இந்த கொடுரம்.. இந்த oil நம் பார்வையில் படுவதால் தெரிகிறது.. ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர்.. இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும்.. வாழ்த்துகள் இந்த விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு.. pic.twitter.com/EWukIUcWwT
— Mohan G Kshatriyan (@mohandreamer) December 7, 2023
அவர், “எண்ணூர் cpcl அருகே இந்த கொடூரம்.. இந்த ஆயில் நம் பார்வையில் படுவதால் தெரிகிறது.. ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர்.. இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும்.. வாழ்த்துகள் இந்த விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு..” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோன்று தங்களது பகுதியில் மழைநீருடன் எண்ணெய் கழிவும் கலந்து ஏற்பட்டுள்ள ஆபத்தான சூழ்நிலையை உணர்ந்து, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதே எண்ணூர் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தற்கொலைக்கு தூண்டியதாக ’புஷ்பா’ பட நடிகர் கைது!
தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!
oil waste mixed with flood in ennore