தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் இனி வரும் காலங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகமாகவுள்ளது.
பெட்டிக் கடை முதல் சூப்பர் மார்கெட் வரை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
கடைகளில் அனைத்து வகையான பொருட்களுக்கும் மக்கள் தங்களது செல்போனை பயன்படுத்தி யூபிஐ பின் மூலம் பணம் செலுத்துகின்றார்கள்.
இதுவரை, நியாய விலைக் கடைகளில் நேரடியாக பணம் செலுத்தி பொருட்களை வாங்கிகொள்ளும் முறை மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது.
தற்போது, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி இன்று (செப்டம்பர் 2) தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாய விலை கடைகளில் கூகுள் பே, பே டிஎம் போன்ற செயலிகளின் மூலம் யுபிஐ வசதியைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த முறை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நியாய விலை கடைகளில் 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மோனிஷா