தென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி வரும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திலேயே அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படுகிறது.
சென்னைக்குள் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டும் தான் இன்று (ஜனவரி 25) முதல் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை சுற்றறிக்கை அனுப்பியது.
ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எங்களுக்கு தேவையான வசதிகள் இல்லை என்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள் என்றும் தெரிவித்த ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து தான் இயக்குவோம். கிளாம்பாக்கத்திற்கு மாற்ற முடியாது என்றும் பயணிகள் தாங்கள் எங்கிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்தார்களோ அங்கு வந்து பயணத்தை தொடங்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
கிளாம்பாக்கம்தான் என்று அரசும் கோயம்பேடு தான் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் மாறி மாறி கூறி வருவதால் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்த பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.
ஆனால் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நேற்று மாலையே கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு முன்பு தடுப்புகளை வைத்து வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகளை தடுத்து நிறுத்தினர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்துகளை மட்டும் இயக்க அதிகாரிகள் அனுமதித்தனர்.
இதனால் கோயம்பேடு வந்திருந்த முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல குடும்பத்துடன் வந்திருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.
இதனிடையே நேற்று இரவு முதல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்துகளை காவல்துறையினர் கிளாம்பாக்கத்திலேயே தடுத்து நிறுத்தி வருகின்றனர். சில ஆம்னி பேருந்துகளில் வந்த பயணிகள் கிளாம்பாக்கம் சாலையிலேயே இறக்கி விடப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
தற்போது கிளாம்பாக்கத்தில் 217 ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் 145 பேருந்துகள் பார்க்கிங் பகுதியிலும் இதர பேருந்துகள் கிளாம்பாக்கம் முனையத்திற்குள்ளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் நுழையும் பேருந்துகளுக்கு 150 ரூபாய் கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, “கடந்த மாதமே ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க ஒப்புக் கொண்டனர். ஆனால் அதற்கு மாறாக கோயம்பேட்டில் இருந்து தான் இயக்குவோம் என்று திடீரென்று கூறுகிறார்கள். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இது சட்டவிரோதமானது.
ஆம்னி பேருந்துகளை நிறுத்தி வைப்பதற்கு கிளாம்பாக்கத்தில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் முடிச்சூரில் 25 ஏக்கரில் ஆம்னி பேருந்துகளை நிறுத்திவைப்பதற்காக ரூ.28 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ஆணாதிக்கம் காரணமாகவே சிறுவர்கள் மீது பாலியல் வன்கொடுமை தொடர்கிறது: அலங்கார் ஷர்மா