வடகிழக்கு பருவமழையைச் சமாளிக்க தமிழ்நாடு அரசு செய்துள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று(செப்டம்பர் 30) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அதில் “கடந்த மூன்றாண்டுகளாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துவருகிறது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை நீடிக்கிற வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான மழை கிடைக்கிறது.
முன்பெல்லாம் பருவம் முழுவதும் பரவலாகப் பெய்துவந்த வடகிழக்கு பருவமழை, சமீப காலங்களில் காலநிலை மாற்றத்தினால், சில நாட்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ மொத்த மழையும் பெய்துவிடுகிறது. இதனால் சாலை, மின்சாரம் போன்ற உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் எழுகிறது.
கடந்த ஆண்டு சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் தமிழ்நாடு விரைவாகச் செயல்பட்டதினால், பாதிப்பிற்குள்ளான மாவட்டங்கள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பியது.
அதே போல இந்தாண்டு பருவமழையைச் சமாளிக்க, மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள், மற்றும் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்கள்.
வானிலை உத்தரவுகளை உடனுக்குடன் வழங்க, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தை நான் திறந்துவைத்தேன்.
அதே போல் மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படும் மீனவர்களுக்காக, புயல், கனமழை குறித்த தகவல்கள் நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக வழங்கப்படும்.
நாட்டுக்கு முன்னுதாரணமாகச் சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு வார்டு, தெரு வாரியான வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க, ‘சென்னை நிகழ் நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு’ ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று பேசினார்.
மேலும் அவர் “ வெள்ளம் ஏற்பட்டால், அரசு இயந்திரம் விரைவாக செயல்பட வேண்டும். ஒரு உயிர் இழப்புகூட ஏற்படக்கூடாது.
மாவட்டங்களைப் பற்றி முழு விவரமும் அறிந்த மூத்த அலுவலர்களைக் கண்காணிப்பாளர்களாக நியமித்துள்ளோம். அவர்கள் மழைக்கு முன்னதாகவே தங்களது பணிகளைத் துவங்க வேண்டும்.
இதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் நடைப்பெற்று வரும் தூர்வாரும் பணிகள், கழிவுகள் அகற்றுதல், அறுந்து விழக்கூடிய மின் கம்பிகளைச் சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்று ஆய்வு செய்யப்பட வேண்டும்.
தகவல் தொடர்பு, மின்சார வசதி, போன்றவை தடையின்றி வழங்கப்பட வேண்டும்.
பேரிடர் மேலாண்மையில் தன்னார்வலர்கள் ஈடுபடுதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்“ என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மழைநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் பலி… ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் : எடப்பாடி
தவெக கொடியில் யானை சின்னம் : பகுஜன் சமாஜ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பதில்!
இந்தியாவில் முதன் முதலில் 100 கோடி வசூல் செய்த ஹீரோவுக்கு தாதா பால்கே விருது!