சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் போராடி வரும் மீனவர்கள் லூப் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக இன்று (ஏப்ரல் 19) சாலை தடுப்புகளை அகற்றினர்.
சென்னை கலங்கரை விளக்கம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் ‘லூப்’ சாலையை ஆக்கிரமித்துள்ளதாக கூறி உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 12- ந்தேதி அங்கிருந்த மீன்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
இதை கண்டித்து தொடர்ந்து 6வது நாளாக அந்தப்பகுதியைச் சேர்ந்த மீனவ மக்கள் போராடி வருகின்றனர்.

நேற்று நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான 2 கிலோ மீட்டர் தூர லூப் சாலையில் மீன்பிடி படகுகளை நிறுத்தி வைத்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் வாகனங்கள் அந்த சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேலு ஆகியோர் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனையடுத்து ஒரு வழித்தடத்தில் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக சாலையில் மறியலுக்காக நிறுத்தப்பட்டிருந்த படகுகள், தற்காலிக கூடாரங்கள் மற்றும் தடுப்புகளை நொச்சிக்குப்பம் மீனவர்கள் அகற்றினர்.
எனினும் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில் சாதகமான நிலை ஏற்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா