மகளிர் உரிமைத் தொகை பெற அரசு பல்வேறு நிபந்தனைகள் விதித்திருக்கும் நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாதவர்களுக்கும் பணம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது கூறியுள்ளார்.
வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளது. இதற்காக சுமார் 1.60 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அந்த படிவங்களில் பெண்கள் தெரிவித்துள்ள தகவல்களைச் சரிபார்க்கும் பணியும் நடந்து வருகிறது.
மாவட்ட ஆட்சியர்களும் நேரில் சென்று சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “இதுவரை பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை தர நடவடிக்கை எடுக்கப்படும். எண்ணிக்கையை முடிவு செய்யாமல் தகுதியான அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
அதுபோன்று விழுப்புரத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, “முதியோர் உதவித் தொகை பெறுபவராக இருந்தாலும் அவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்க முதல்வர் சொல்லியிருக்கிறார். தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். 1.64 கோடி பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதில் ஒன்றரை கோடி பேருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கொஞ்சம் கூடலாம் அல்லது குறையலாம்” என்று கூறியிருக்கிறார்.
ஒரு கோடி பேருக்கு மட்டுமே மாதம் ரூ. 1000 கொடுக்கப்படும் என்று முன்னதாக செய்திகள் வெளியான நிலையில் அமைச்சர்கள் இவ்வாறு கூறியிருக்கின்றனர்.
இதுதவிர இந்த திட்டத்துக்காக விண்ணப்பித்த சில பெண்களுக்கு வங்கிக் கணக்கே இல்லாமல் இருக்கிறது. அதேபோல் வங்கிக் கணக்கில் பான் எண் இணைப்பு இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு இந்த உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து பெரம்பலூரில் பேசியுள்ள சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது, “வங்கி கணக்கு, பான் கார்டு இல்லாத, ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்காத பயனாளிகளுக்கு அஞ்சலக வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தகுதி வாய்ந்த அனைவரும் இந்த திட்டத்தில் பயன் பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.
பிரியா
காஷ்மீரில் முதன்முறையாக வலம் வந்த உலக அழகிகள்!
சாலையோர உணவகங்களுக்கு புதிய உத்தரவு: போக்குவரத்துத்துறை அதிரடி!