மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா இன்று (ஏப்ரல் 23) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு இன்று தொடங்கி மே 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கொடியேற்ற விழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
காலை 10 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர்-மீனாட்சி ஆகியோர் சுவாமி சன்னதியின் முன் உள்ள கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
வரும் மே 8ஆம் தேதி வரை சித்திரைத் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் விழா நடக்கும் நாட்களில் தினமும் காலை, இரவு நேரங்களில் சுவாமி அம்பாள் கற்பக விருட்சம், பூதம், வெள்ளி சிம்மாசனம், தங்கச் சப்பரம், ரிஷபம், மரவர்ண சப்பரம், இந்திர விமானம் உள்ளிட்ட வாகனங்களில் 4 மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
16 நாட்கள் நடைபெற உள்ள இவ்விழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 01ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், மே 02 ம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.மே5ல் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த ஆண்டு திருவிழா நிகழ்ச்சி விபரக்குறிப்பு
ஏப்ரல் 23 – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருக்ஷம், சிம்ம வாகனம்
ஏப்ரல் 24 – பூத வாகனம், அன்ன வாகனம்
ஏப்ரல் 25 – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
ஏப்ரல் 26 – தங்க பல்லக்கு
ஏப்ரல் 27 – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்
ஏப்ரல் 28 – சைவ சமயம் ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்
ஏப்ரல் 29 – நந்திகேஸ்வரர், யாளி வாகனம்
ஏப்ரல் 30 – மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா
மே 01 – மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா
மே 02 – மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – யானை வாகனம், புஷ்ப பல்லக்கு
மே 03 – தேரோட்டம் – சப்தாவர்ண சப்பரம்
மே 04 – தீர்த்தவாரி – வெள்ளி விருச்சபை சேவை
மே 04 – கள்ளழகர் எதிர்சேவை
மே 05 – கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் – 1000 பொன்சப்பரம்
மே 06 – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல்
மே 06 – இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார காட்சி
மே 07 – கள்ளழகர் மோகினி அவதார திருக்கோலம் – புஷ்ப பல்லக்கு
மே 08 – கள்ளழகர் திருமலை எழுந்தருளல் நடைபெறும்.
சக்தி, பிரியா