தொழில்நுட்பம் பன்மடங்கு வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. நம் அன்றாட வாழ்வில் அத்தியாவசியமாக மாறிவிட்ட செல்போனில் தினம் தினம் புது செயலிகள் வந்துகொண்டே இருக்கின்றன.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற நிறைய சோஷியல் மீடியா ஆப்கள் இயங்கி வருகின்றன.
அந்தவகையில் தற்போது சென்னையை மையமாக கொண்டு புதிய சோஷியல் மீடியா செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாம் வசிக்கும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் அனைத்து நிகழ்வுகள், இடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்துகொள்வதோடு, உள்ளூர் தயாரிப்புகளை விளம்பரம் செய்யும் வகையில் பிசினஸ் செயலியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
KYNHOOD TECHNOLOGIES நிறுவனம் இந்த செயலியை உருவாக்கியுள்ளது. இதற்கு know your neighbour hood – KYN என பெயரிடப்பட்டுள்ளது. ஹைப்பர் லோக்கல் முறையில் உருவாகியுள்ள இந்த செயலி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன் தினம் (பிப்ரவரி 19) தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “தொழில்நுட்பம் பல்வேறு நாடுகள், சமூகங்கள் மட்டுமில்லாது தனி நபர்களுக்கும் முன்னேற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக கல்வித்துறையில் தொழில்நுட்பம் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது. ஒருகாலத்தில் படிப்பதற்கே பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலை மாறி, தற்போது பட்டயக் கல்வியைக் கூட இலவசமாக இணையத்தில் படிக்க முடிகிற நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சமூக வலைதளம் உள்ளூர் தொழில்முனைவோர், உள்ளூர் திறமையாளர்கள், சமூக குழுக்கள் என ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள வழி அமைத்துக்கொடுக்கும் என்பதை எண்ணும்போதே பெருமையாக இருக்கிறது. இச்செயலி மூலம், ஆரோக்கியமான இணைய சமூகம், இணைய பயன்பாடு நிச்சயம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டாக்கும்” என தெரிவித்தார்.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி காயத்ரி தியாகராஜன் கூறுகையில், “இச்செயலி தொலைக்காட்சி, செய்தித்தாள், சமூக வலைதளம் என மூன்றின் கலவையாக இருக்கும். சென்னையை முதன்மையாக வைத்து இது தொடங்கப்பட்டுள்ளது.
மக்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் தளமாக நிச்சயம் இருக்கும். அதுமட்டுமில்லாமல், சிறு, குறு தொழில் முனைவோர், பெண் தொழில்முனைவோர், இல்லத்தரசிகள் தாங்கள் வாழும் பகுதிகளில் தங்களின் பொருட்களை/தயாரிப்புகளைச் சுலபமாக விற்பனை செய்ய ஏதுவாக இருக்கும்.
இதுமட்டுமல்லாமல், பெரிய நிறுவனங்களும் தங்களை சுலபமாக ஹைப்பர் லோக்கல் சந்தையில் விளம்பரப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும்.
பயனாளர்களும் தங்களது பதிவுகளை வீடியோ, க்ளிப்ஸ் வடிவங்களில் பதிவிட முடியும். தாங்கள் வாழும் பகுதிகளில் நிகழும் நிகழ்வுகளை நேரலையாக காண, படிக்க, தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
இந்த அறிமுக விழாவில், டேனி ஃபவுண்டேஷன் நிறுவனரும், சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆட்சிக்குழு உறுப்பினருமான வீதா தானி, பிரபல டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், விஞ்ஞானியும் பத்மபூஷண் விருதாளருமான நம்பி நாராயணன், முதல்வரின் மருமகன் சபரீசன், நடிகர்கள் மாதவன், சித்தார்த் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…