கிச்சன் கீர்த்தனா: கொத்தவரங்காய் வற்றல்!

Published On:

| By Kavi

எல்லா காலங்களிலும் கிடைக்கும் கொத்தவரங்காய் கொண்டு, இந்த வெயில் காலத்தில் வற்றல் போட்டு வைத்துக்கொண்டால் அவசரத்துக்குக் கைகொடுக்கும். இந்த வற்றலை தயிர் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

என்ன தேவை?

கொத்தவரங்காய் – அரை கிலோ

உப்பு – ஒன்றரை டீஸ்பூன்

புளிக்காத தயிர் – 2 கப்

எப்படிச் செய்வது?

கொத்தவரங்காய் பிஞ்சாக இல்லாமல் பெரியதாக, முற்றியதாக இருந்தால் வற்றல் நன்றாக இருக்கும். கொத்தவரங்காயைக் கழுவி இரண்டு நுனிகளையும் நறுக்கி விடவும்.

ஒரு லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, இதில் அரை டீஸ்பூன் உப்பு, மற்றும் கொத்தவரங்காயைச் சேர்த்து பாதி அளவு வேக விடவும். பிறகு கொத்தவரங்காயை தண்ணீர் வடிக்கும் தட்டில் கொட்டி தண்ணீரை வடிக்கவும்.

பிறகு இதை வெயிலில் நன்றாக காய வைக்கவும். கொத்தவரங்காயுடன் மீதமுள்ள ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக ஒட்டுமாறு பிசறி வெயிலில் காய வைக்கவும்.

மாலையில் எடுத்து மீண்டும் அதே தயிரில் போட்டு வைக்கவும். மறுநாள் மீண்டும் வெயிலில் வைக்கவும். இதே போல தயிர் வற்றும் வரை ஊற வைத்து வெயிலில் காய விடவும்.

காய்ந்த கொத்தவரங்காயை எண்ணெயில் அப்பளம் பொரிப்பது போல் பொரித்து எடுக்கவும். பொரிக்கும்போது அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். இல்லையென்றால், வற்றல் கருகி கசப்பு ருசியைக் கொடுக்கும்.

கத்திரிக்காய் வற்றல்!

மா வற்றல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share