கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… ஏர் ஃப்ரையர் சமையல் – நல்லதா? கெட்டதா?

Published On:

| By christopher

சமையல் சம்பந்தமாக  பிரபலமாகப் பேசப்படும் கருவி ஏர் ஃப்ரையர் (Air Fryer). அது உண்மையில் உபயோகமானதா? எப்படிப்பட்ட உணவுகளுக்கு ஏர் ஃப்ரையரை பயன்படுத்தலாம்? இதில் சமைத்துச் சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியமானதா? ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஏர் ஃப்ரையர் என்பது எண்ணெய் இல்லாத சமையலுக்கான நவீன கருவி. மின்சாரத்தில் இயங்கக் கூடியது. இதனுள் ஒரு ஃபேன் இருக்கும். அதிலிருந்து வெளிவரும் சூடான காற்றின் மூலம் உணவு சமைக்கப்படும்.

ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், உருளைக்கிழங்கு வறுவல், சிக்கன் நக்கெட்ஸ், ஆனியன் ரிங்ஸ், காய்கறிகள் என சைவ, அசைவ உணவுகளை ஏர் ஃப்ரையரில் எண்ணெயே இல்லாமல் சமைக்கலாம். ஆரோக்கியமான உணவுகளை விரும்புவோருக்கான சிறந்த சாய்ஸ் இந்தக் கருவி.

உதாரணத்துக்கு, ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ்… உருளைக்கிழங்குகளை வெட்டி, எண்ணெயில் பொரித்து ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் செய்யும்போது, அதிலுள்ள கார்போஹைட்ரேட்டும், ஈரப்பதமும் குறைந்துவிடும். அதுவே, ஏர்ஃப்ரையரில் செய்யும்போது இந்த இரண்டும் தக்கவைக்கப்படும். எண்ணெயே சேர்க்காமல் சமைப்பதால் கலோரிகள் பெருமளவில் குறையும். பொரித்த உணவுகள் ஏற்படுத்தும் உடல்நல பாதிப்புகள் தடுக்கப்படும். விருப்பமான உணவுகளை ஆரோக்கியமாகவும் சாப்பிட வேண்டும் என்போர், ஏர் ஃப்ரையரில் எண்ணெயின்றி சமைத்துச் சாப்பிடலாம்.

ஆனால், எண்ணெய் சேர்த்துச் சமைக்கும் உணவுகளுக்கும் ஏர் ஃப்ரையரில் சமைக்கும் உணவுகளுக்கும் தோற்றத்திலும் சுவையிலும் சில வேறுபாடுகள் இருக்கும். எண்ணெயில் பொரிக்கும்போது வரும் கண்களைக் கவரும் வகையிலான பொன்னிறமும் மொறுமொறுப்பும் ஏர் ஃப்ரையர் சமையலில் இருக்காது. சுவையில் லேசான வித்தியாசம் இருக்கும்.

மேலும், ஏர் ஃப்ரையரில் சில பாதகங்களும் உள்ளதை மறுக்க முடியாது.  சீக்கிரமே சமைத்துவிடுவதால் உணவு ஓவர்குக் ஆவதற்கு வாய்ப்புண்டு. லேசாக அசந்தாலும் உணவு கருகிவிடலாம். அப்படி கருகி, அதிலிருந்து வெளிவரும் புகை நமக்கு ஆரோக்கியமானதல்ல. இதைச் சுத்தப்படுத்துவதும் சிரமமானது. ஒரே நேரத்தில் பல பேருக்கு பெரிய அளவுகளில் சமைப்பதும் சாத்தியமில்லை. பேட்ச், பேட்ச்சாகத்தான் சமைக்க வேண்டும். இவற்றையெல்லாம் தாண்டி, ஏர் ஃப்ரையர் வாங்க நினைத்தால், தரமான நிறுவன தயாரிப்பாகப் பார்த்துத் தேர்வு செய்வதே சிறந்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தல் தேதி அக்கப்போரு: அப்டேட் குமாரு

543க்கு பதில் 544 : தேர்தல் ஆணைய அட்டவணையில் ஒரு தொகுதி கூடியது ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel