கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.
கடந்த அக்டோபர் 11ஆம் தேதி மைசூரு- தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், மைசூரில் இருந்து பீகார் புறப்பட்டது. இந்த ரயில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கவரப்பேட்டை பகுதியில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டன. இரு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
மெயின் லைனுக்கு பதிலாக லூப் லைனில் பாக்மதி எக்ஸ்பிரஸ் சென்றதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இந்த விபத்து தொடர்பாக கொருக்குபேட்டை ரயில்வே போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரயிலின் லோகோ பைலட் முதல் கேங்மேன் வரை 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விபத்து நடந்த பகுதியில் தண்டவாளத்தில் நட்டு, போல்ட் கழன்று இருந்ததே காரணம் என்றும் பொன்னேரி சிக்னல் அருகே 50பி, 51பி, 53பி ஆகிய இடங்களில் தண்டவாளங்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரயில் விபத்து என்பதால் தமிழக க்யூ பிரிவு போலீசார், முஸ்லீம் தீவிரவாதத்தை கண்காணிக்கும் தனி யூனிட், மத்திய மாநில உளவு பிரிவினரும் விசாரணை மேற்கொண்டனர்.
ரயிலை கவிழ்க்க சதி செய்வது தொடர்பான, இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 150ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இது தொடர்பாக தமிழக க்யூ பிரிவு போலீசாரிடம் நாம் விசாரித்தபோது, “சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும், சம்பவம் நடந்த அடுத்த நாளும் சந்தேக நபர்கள் யாரேனும் இந்த பகுதிக்கு வந்து சென்றார்களா? என்று சுற்று வட்டார பகுதிகளில் இருக்கக் கூடிய சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம்.
அந்த பகுதியில் உள்ள டவருக்கு செல்போன் அழைப்புகள் ஏதேனும் வந்ததா? என்றும் பார்க்கப்பட்டது.
அந்த தண்டவாளத்தில் கிடந்த நட்டு, போல்டு உள்ளவற்றை ஆய்வுக்கு அனுப்பினோம். இதுபோன்று பலகட்ட விசாரணைக்கு பின்னர் இது சதிவேலை இல்லை. விபத்துதான் என்பது தெரியவந்தது” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெல்லை: நீட் கோச்சிங் சென்டரில் மாணவர்கள் மீது தாக்குதல்… விடுதி மூடல்!
16 செல்வங்கள்… 16 குழந்தைகள் : நாடாளுமன்ற தொகுதிகள் குறைவதை சுட்டிக்காட்டி பேசிய ஸ்டாலின்