கொளுத்தும் வெயிலில் மலிவாகக் கிடைக்கும் கத்திரிக்காய் கொண்டு இந்த வற்றல் போடலாம். கத்திரிக்காய் வற்றலை நன்றாக காயவைத்து எடுத்து வைத்தால், ஒரு வருடம் வரை கெடாது. காய்கறி விலை அதிகமாக விற்கும் காலங்களில் இந்த வத்தலை உபயோகித்துக் கொள்ளலாம்.
என்ன தேவை?
கத்திரிக்காய் – ஒரு கிலோ
புளி – பெரிய எலுமிச்சையளவு
உப்பு – ஒரு கைப்பிடி
எப்படிச் செய்வது?
கத்திரிக்காயைக் கழுவி இதன் காம்பை மட்டும் நறுக்கி விடவும். சதைப்பகுதியை நீளவாக்கில் நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். தண்ணீரில் போட்டு வைப்பதால், கத்திரிக்காய் கறுத்துப் போகாது.
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து, இதனுடன் ஊற வைத்த புளித்தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் நறுக்கிய கத்திரிக்காய்த் துண்டுகளைப் சேர்த்து வேக விடவும். பாதி வெந்தவுடன் கத்திரிக்காயை தண்ணீர் வடிக்கும் தட்டில் கொட்டி ஆற விடவும்.
பிறகு கத்திரிக்காயை தட்டில் ஒவ்வொன்றாகப் பரப்பி வைத்து வெயில் காய வைக்கவும். இரண்டு மூன்று நாட்கள் காய வைத்து எடுத்து வைக்கவும்.
இந்தக் கத்திரிக்காய் வற்றலை வைத்து நாம் தினசரி செய்யும் காய்கறி சாம்பார் போலவே சாம்பார் செய்யலாம். கத்திரிக்காய் வற்றலை சாம்பார் செய்வதற்கு முன் சிறிது நேரம் தண்ணீரீல் ஊற வைத்துக் கொள்ளவும். கத்திரிக்காய் புளிக்குழம்பு செய்யும்போது இந்த வற்றலை சேர்த்து குழம்பு செய்யலாம்.