100% சுகப்பிரசவத்தை இலக்காகக் கொண்டு அரசு மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுவது அறிவியலுக்குப் புறம்பானது என்று மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் 100% சுகப்பிரசவம் நடைபெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அண்மையில் கூறியிருந்தார்.
இதற்கு ஆட்சேபணை தெரிவித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் பாரா மெடிக்கல் கல்வி மற்றும் நலச்சங்கம் இன்று(டிசம்பர் 2)நீண்ட விளக்கம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதில், “இதுபோன்ற அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களை பொதுவெளியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவதை தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தில் அண்மைக்காலங்களில் “பிரசவம் என்பது இயற்கையானது. அதை வீட்டிலேயே இயற்கையாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஆடு,மாடுகள்,கால்நடைகள் இயற்கையாக பிரசவிக்கவில்லையா?
நாம் மட்டும் ஏன் பிரசவத்திற்காக மருத்துவமனைகளை நாட வேண்டும்? மருத்துவமனைகளுக்குச் சென்றால் பல ஆயிரம் செலவாகும்.
பணத்தை பிடுங்குவதற்காக தேவையின்றி அறுவை சிகிச்சை செய்கிறார்கள்” என்றெல்லாம் நன்கு படித்தவர்களே கருத்துக்களை பரப்புகின்றனர்.
நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிராக செயல்படுகின்றனர். இது சரியல்ல. அரசு மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை எங்கே நடைபெறுகிறது?
தவறான கருத்துக்களின் தாக்கத்தால், வீட்டிலேயே “யூடியூபை” பார்த்து பிரசவம் பார்க்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. இதில் சில தாய்மார்களும் இறந்துள்ளனர்.
எனவே, மருத்துவ அறிவியல் மீது நம்பிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில் அதை தகர்க்கக் கூடாது.
சுகப்பிரசவம் என்பது குறித்தே தவறான கண்ணோட்டம் உள்ளது. பெண்ணின் பிறப்பு உறுப்பு வழியாக குழந்தை பிறந்தாலே(vaginal delivery) அது சுகப்பிரசவம் ஆகிவிடாது.

பிரசவம் முடிந்த பின்னர் குறைந்தது சில நாட்கள் ஆகும் வரை தாயும் சேயும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே அப்பிரசவத்தை சுகப்பிரசவம் என்று கூற முடியும்.
பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் கடும் இரத்தப்போக்கின் காரணமாக மட்டுமே ஏராளமான தாய்மார்கள் இறக்கிறார்கள். பல பச்சிளங் குழந்தைகள் பல காரணங்களால் இறக்கின்றன. இவற்றை எவ்வாறு சுகப்பிரசவம் எனக் கூறுவது?
நவீன அறிவியல் மருத்துவத்தை எதிர்க்கும் பல அமைப்புகள், பிற்போக்கு சக்திகள்,பழமைவாதிகள் சிசேரியன் என்றாலே பெரிய கேடு, கொலைக்குற்றம் என்ற எண்ணத்தை மக்களின் மனதில் பதிய வைத்து வருகின்றன.
அதற்கு வலுசேர்க்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களின் கருத்து அமைந்துள்ளது, மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது.
அமைச்சர் 100 சதவீத சுகப்பிரசவம் செய்வது தான் இலக்கு என்று பேசி வருவது, அறுவை சிகிச்சையை ஏதோ குற்றச் செயல், அவசியமற்ற ஒன்று என்பதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.
தாயின் உடல் நிலை கருதியும், குழந்தையின் உடல் நிலை கருதியும், கருப்பையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கருதியும், குழந்தை மற்றும் நஞ்சுகொடி இருக்கும் நிலை கருதியும் , தாய்,சேய் உயிர்களைக் காக்க செய்யக்கூடிய அறுவை சிகிச்சையாகும்.
கர்ப்பப்பை வாய் சரியாக விரிவடையாத நிலை, குறுகலாக பெண்ணின் இடுப்பு எலும்பு இருத்தல், பிறப்பு உறுப்பு வழியாக குழந்தை வெளி வர முடியாத வகையில் குழந்தையின் தலை பெரியதாக இருக்கும் நிலை ( CPD)

குழந்தை எடை அதிகமாக இருத்தல், தலை மேலாகவும் புட்டம் கீழாகவும் (breach ) இருக்கும் குழந்தை, தாய்க்கு மிக உயர் இரத்த அழுத்தம் இருத்தல், நஞ்சுக்கொடி முன்கூட்டியே பிரிதல் (abruption) போன்ற சிக்கல்கள் ஏற்படும் போது தாய்-சேய் உயிர் காக்க சிசேரியன் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
அண்மைக்காலங்களில் அதிகரித்து வரும், உடல் பருமன், கர்ப்பகால சர்க்கரை நோய், போன்றவையும் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகின்றன.
எனவே, எந்த ஒரு காலத்திலும் சிசேரியனே தேவை இல்லை,100 விழுக்காடு சுகப்பிரசவம் என்ற நிலையை எட்ட முடியாது. அப்படிப்பட்ட முயற்சி அவசியமற்றது.ஆபத்தானது. எண்ணற்ற உயிர்களை பலி கொள்ளக் கூடியது.
கடந்த 50 ஆண்டுகளில் மகப்பேறு மருத்துவம், மயக்க மருத்துவம், குழந்தை மருத்துவம்,(neonatal ICU) , தீவிர சிகிச்சை மருத்துவம் என மருத்துவத் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளதால்
சிசேரியன் செய்வது பாதுகாப்பான ஒன்றாக மாறிவிட்டது. அறிவியல் தொழில் நுட்பம் மனித குலத்திற்கு வழங்கிய மாபெரும் கொடை அது. கோடிக்கணக்கான உயிர்களை அது காப்பாற்றியுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின் தாய், சேய் மரணம் தொடர்ந்து குறைந்து வருவதற்கு மருத்துவ ரீதியாக தேவைப்படும் (medically indicated) சிசேரியன் அறுவை சிகிச்சை ஒரு முக்கிய காரணமாகும்.
இன்னும் சொல்லப்போனால் பலகுறை மாத மற்றும் 600 கிராம் எடை மட்டுமே உள்ள குறைமாத சிசுக்கள் கூட இன்று உயிருடன் இருப்பதற்கு காலத்தே செய்த சிசேரியன் தான் காரணம்.
பல தாய், சேய் மரண ஆய்வுகளில் ( death audit ) சரியான நேரத்தில் சிசேரியன் செய்யப்பட வில்லை என்பது தான் காரணமாக கூறப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனம் மொத்த பிரசவங்களில் 10 முதல் 15 சதவீதம் வரை சிசேரியன் மூலம் பிரசவம் பார்ப்பதன் மூலம் தாய்,சேய் மரணங்களை குறைக்க முடியும் எனக் கூறியுள்ளது.
பிறப்பு உறுப்பின் வழியாக நடக்கும் சிக்கலான நீண்ட நேர பிரசவங்களால் (Obstructed lobour), பிரசவத்திற்கு பின்பு, பிறப்பு உறுப்புக்கும்,மலக்குடல் அல்லது சிறுநீர்ப்பை இடையே துவாரம் ஏற்படுதல் (Recto,uretero vaginal fistula), கர்ப்பப்பை கிழிதல், வெடித்தல் (rupture uterus), போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சிசேரியன் செய்துகொள்வது தவறானது, அவசியமற்றது,அபாயகரமானது, தவிர்க்க வேண்டிய ஒன்று என்று இருந்த தவறான கருத்துக்களை பெண்கள் கைவிட்டு வருகின்றனர்.
அது மட்டுமின்றி அவசியமான நிலைமைகளில்,சிசேரியன் செய்துகொள்வதன் நன்மை ,தேவை மற்றும் பாதுகாப்பை உணர்ந்து பெண்கள் தாமாகவே முன்வந்து சிசேரியன் செய்து கொள்கின்றனர். அத்தகைய போக்கிற்கு எதிராக அமைச்சரின் கருத்து அமைந்துவிடும் ஆபத்து உள்ளது.
சிசேரியன் தேவையா? இல்லையா? என்ற முடிவை கர்ப்பிணி பெண்ணும், அவருக்கு சிகிச்சை அளிக்கும் மகப்பேறு மருத்துவரும் மட்டுமே சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொருத்து முடிவு செய்ய இயலும். இதில் பிறரின் தேவையற்ற அழுத்தம் தவிர்க்கப்பட வேண்டும்.
மகப்பேறு மருத்துவத்துறை மீது, சுக பிரசவம் செய்தே ஆக வேண்டும் என்று அழுத்தம் தருவது, நன்மையை விட தீமையையே அதிகம் தரும். சுகப்பிரசவத்தை நிர்பந்திப்பது, ஒரு பெண்ணின் உடலுடன்,உயிருடன் விளையாடும் ஆபத்தான விளையாட்டாகும்.
யோகா செய்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்பதும் சரியல்ல. யோகாவை நீண்ட காலமாக செய்யும் பெண்களுக்கும் பல்வேறு காரணங்களால் சுகப்பிரசவம் ஏற்படாத நிலை உருவாகலாம்.சிசேரியன் அவசியப்படலாம்.
பெண்களின் உடல் உழைப்பு குறைந்தது தான், சுகப்பிரசவம் இல்லாமல் போகக் காரணம் என்பதும் மேம்போக்கானதாகும். கடுமையான உடல் உழைப்பு இருந்த காலத்தில் கூட, சிசேரியன் போன்ற சிகிச்சை வசதிகள் இல்லாத காரணத்தால் ,பேறுகால தாய்மார்கள் இறப்புவிகிதம் அதிகமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

சுகப்பிரசவம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பெண்களை கடுமையான உடல் உழைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியாது,கூடாது.இத்தகைய முயற்சிகளை சில இந்துத்துவா மருத்துவ அமைப்புகள் மேற் கொள்கின்றன.
அம்மிக்கல்,ஆட்டுக்கல்லை பெண்கள் பயன்படுத்த வேண்டும் என ஆலோசனைகளைக் கூறுகின்றன. முகாம்களை நடத்துகின்றன. இத்தகைய கொடுமைகளை, பெண்ணடிமைத்தனத்தை ஆதரித்திட முடியாது. அமைச்சரின் கருத்து அத்தகையோருக்கு துணைபுரிந்துவிடக்கூடிய ஆபத்து உள்ளது.
எனவே, சிசேரியன் என்ற உயிர்காக்கும் அறுவை சிகிச்சையை முற்றிலும் தவிர்க்க இயலாது. அதை மருத்துவ ரீதியாக அவசியப்படும் நேரத்தில்,நிலைமைகளில் பயன்படுத்தியே தீர வேண்டும். அந்த வசதிகளை மேலும் பரவலாக்க வேண்டும்.
அதே சமயம், அவசியமற்ற முறையில் , லாப நோக்கு, மருத்துவக் காப்பீடு தொகையை பெறுதல் போன்ற காரணங்களுக்காகவும், மருத்துவர்களின் விருப்பங்களுக்கு ஏற்பவும், நல்ல நாள் கெட்ட நாள்,நட்சத்திரம், சாதகம் பார்ப்பது போன்ற பல்வேறு மூட நம்பிக்கைகளாலும் சிசேரியன் செய்யப்படுவது அதிகரிக்கிறது.
இவை தடுக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை,விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். இயல்பான பிரசவத்தால் ஏற்படும் வலி பயத்தாலும் பல பெண்கள் சிசேரியனை விரும்புகின்றனர்.
இதற்கு தீர்வு காண வேண்டும். வலியில்லா நவீன பிரசவ முறைகளை நடைமுறைப் படுத்த வேண்டும்” என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
கலை.ரா
குழந்தைகள் ஆபாச வீடியோ: திருச்சி நபர் மீது சிபிஐ வழக்கு!
“மன உளைச்சலா இருக்கு”: எடப்பாடி வழக்கில் அறப்போர் இயக்கத்துக்கு உத்தரவு!