மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

Published On:

| By Monisha

தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ஆனால் நுகர்வோர்களுக்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்று கேள்விகளும் சந்தேகமும் எழுந்திருக்கின்றன. இதற்கான தீர்வை காணலாம்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையத்தளம் மூலமாகவும் அல்லது மின் வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்றும் இணைத்துக் கொள்ளலாம்.

இணையதளம் மூலம்

மேற்கண்ட இணையத்தள பக்கத்திற்குச் சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணைப் பதிவு செய்யவும். பதிவு செய்த உடனே மின் இணைப்பில் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை பதிவிட்ட பிறகு ஆதார் அட்டையையும், ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும்.

அடுத்ததாக நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளரா, வாடகை வீட்டில் குடியிருப்பவரா அல்லது வீட்டின் உரிமையாளராக இருந்தும் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன்கள் கேட்கும்.

அதில் உங்களுக்குத் தகுந்த ஆப்ஷனை தேர்வு செய்து ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைத்துக் கொள்ள முடியும். இதையடுத்து ஒப்புகை ரசீது (Acknowledgment Receipt) வரும். அதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

தமிழகத்தில் உள்ள அனைத்து மின் வாரிய அலுவலகங்களிலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்று (நவம்பர் 28) முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் செயல்படும்.

மின் நுகர்வோர் சிறப்பு முகாமிற்கு, மின் பயனீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையை நேரடியாகக் கொண்டு சென்று, இணைத்துக் கொள்ளலாம்.

அரசு விடுமுறை நாட்களைத் தவிர, ஞாயிற்றுக் கிழமை உட்பட அனைத்து தினங்களிலும் சிறப்பு முகாம் செயல்படும்.

வாடகை வீட்டில் வசிப்பவர்கள்

வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டின் உரியமையாளர் அனுமதி தந்தால் வாடகை வீட்டில் உள்ளவரே பதிவு செய்துகொள்ள முடியும்.

வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை இணைத்தால், மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறிவிடுமா என்ற சந்தேகமும் இருக்கும். ஆனால் ஆதார் இணைப்பு என்பது ஒரு விவரம் மட்டுமே. வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பின் பெயரில் மாற்றம் செய்ய முடியும்.

வாடகைதாரர் மாறும்போது, புதிதாக குடியிருக்க வருவோரின் ஆதாரை இணைத்துக் கொள்ளலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் நபர் ஒரே ஆதார் எண்ணை அனைத்து மின் இணைப்புடனும் இணைத்துக் கொள்ளலாம். இதனால் , எந்தப் பாதிப்பும் இல்லை.

பெயர் மாற்றம் செய்யாமல் இணைக்க முடியுமா?

மின் இணைப்பு தாத்தா, அப்பா அல்லது வீட்டில் வேறு ஒருவர் பெயரில் இருந்தால், மின் இணைப்பை யார் பெயரில் மாற்றம் செய்ய உள்ளீர்களோ அவரது பெயரில் உள்ள ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மோனிஷா

கனடாவில் கோர விபத்து: இந்திய மாணவன் பலி!

ஷ்ரத்தா பாணியில் அடுத்த கொலை: உடலை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த மனைவி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel