கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆஜரான அவரது தோழி சுவாதி சாட்சியத்தை மாற்றி கூறியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் 2015 ஆம் ஆண்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்ததோடு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும், 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பிலும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் பிறழ்சாட்சியான கோகுல்ராஜின் தோழி சுவாதியை ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டதையடுத்து கடந்த 25 ஆம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது சில சிசிடிவி காட்சிகளையும், ஆடியோக்களையும் காட்டி கேட்டபோது கோகுல்ராஜ் உடன் இருப்பது நானில்லை. தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறினார்.
ஆனால் அவர் மாஜிஸ்ட்ரேட்டிடம் அளித்த வாக்குமூலத்திற்கும் தற்போது அளிக்கும் வாக்குமூலத்திற்கும் முற்றிலும் முரண்பாடு இருப்பதாகக் கூறி நீதிபதிகள் எச்சரித்தனர்.
உண்மையை கூற சுவாதிக்கு கால அவகாசம் வழங்கி வழக்கை இன்று(நவம்பர் 30) ஒத்தி வைத்திருந்தனர். அதன்படி சுவாதி இன்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள், “நீங்கள் சொல்லும் பதிலில் உண்மை இல்லை எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படும் என தெரிவித்து உங்களுக்கு நேரம் கொடுத்து அனுப்பினோம். அன்று கொடுத்த வாக்கு மூலத்தில் ஏதேனும் சொல்ல விரும்புகீறீர்களா?” என்று கேட்டனர். அதற்கு சுவாதி, “அன்று கூறியதில் மாற்றம் எதுவும் இல்லை” என்று பதிலளித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், “சாட்சிய சட்டத்தின் படி பல கேள்விகள் கேட்கப்பட்டு அது பதிவு செய்யப்பட்டது. ஆனால், சாட்சியம் சுவாதி முறையாக பதில் அளிக்கவில்லை. உண்மையை சொல்ல மறுக்கிறார்.
சிசிடிவி காட்சிகள் காண்பித்தும் அந்த பெண் யார் என்று தெரியாது என கூறி விட்டார்.
சிசிடிவியில் இருக்கும் காட்சி சுவாதி என்பது சரியாக தெரிய வருகிறது. இருந்தும் அதில் இருப்பது நான் இல்லை என கூறி விட்டார். அவருக்கு ஏதோ ஒரு பக்கத்திலிருந்து அழுத்தம் வருகிறது என தெரிகிறது.
சத்தியபிரமாணம் எடுத்த பின்னர் நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்தால் அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என முந்தைய விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இருந்தும் இன்று சுவாதி எந்த தகவலையும் தரவில்லை. வழக்கு விசாரணை பொருளுள்ளதாக அமைய வேண்டும்.
சாட்சியம் நீதிமன்றத்தில் உண்மையை தெரிவிக்க வேண்டும் அப்போது தான் வழக்கின் உண்மையை அறிய முடியும்.
உயர்நீதிமன்றத்தில் சாட்சியம் பொய் தகவலை தெரிவிப்பதை ஏற்க முடியாது. இதை எளிதாக கடந்து விட முடியாது.
20.12.18 சுவாதி அளித்த சாட்சியத்தையடுத்து வழக்கு அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. இது போன்று பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தீர்ப்பில் பொய்யான சாட்சியம் வழங்கி அதனை நீதிமன்றம் கடந்து விட்டால் பொதுமக்களுக்கு நீதித் துறை மீதான நம்பிக்கை குறைவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.
நீதிமன்றத்தில் தவறான சாட்சியம் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். பல வழக்குகளில் சாட்சியம் கூறி பின் பிறழ் சாட்சியமாக மாறி விடுகின்றனர்.
நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் உண்மையை அறியும் சோதனை பின்னால் செல்ல முடியாது. நீதித்துறை நடுவர் முன்பு அளித்த சாட்சியத்தை மாற்றுவதற்கான காரணத்தைப் பொறுத்து ஏற்கலாம்.
முழுவதுமாக சாட்சியத்தை மாற்றி கூறுவதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் சுவாதி நீதித்துறை நடுவர் முன்பு அளித்த சாட்சியத்தை முழுவதுமாக மாற்றி கூறியுள்ளார்.
சுவாதி படிப்பறிவு இல்லாதவர் இல்லை, பொறியியல் பட்டதாரி. அவர் நீதித் துறை நடுவரிடம் எல்லாம் கூற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என தெரிந்தும் அனைத்தையும் கூறியுள்ளார்.
சுவாதியை சந்தித்ததால் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். நீதித் துறை நடுவரிடம் வழங்கிய சாட்சியத்தை ஏன் மாற்றி கூற வேண்டும்? அதற்கான காரணத்தையாவது தெரிவித்து இருக்கலாம்.
சுவாதிக்கு தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சுவாதி இந்த வழக்கின் நட்சத்திர சாட்சியம். நீதியை காக்கும் விதமாக இந்த நீதிமன்ற அதிகாரத்தை பயன்படுத்தி அவரை விசாரித்தோம்.
நீதிமன்றத்திற்கு தவறான தகவலை சுவாதி அளித்துள்ளார். பொய்யாக சாட்சியம் வழங்கி உள்ளார்.
இந்த வழக்கில் தவறான தகவலை அளித்த சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர உத்தரவிடுகிறோம்” என்றனர்.
இதையடுத்து வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள் நீதிபதிகள்.
கலை.ரா
ஏர்போர்ட் மல்டிலெவல் பார்க்கிங் டிச. 4 ல் திறப்பு: புதிய கட்டணத்தால் அதிர்ச்சி!
48,500 ஆண்டுகள் உறைந்திருந்த ஜாம்பி வைரஸ்: மனிதர்களுக்கு ஆபத்தா?