ஸ்டாலினை ’அண்ணன்’ என்று அழைத்த வீர முத்துவேலின் தந்தை: ஏன்?

Published On:

| By christopher

நிலவின் தென் துருவத்தில் முதன்முறையாக தரையிறங்கிய பெருமையை இந்தியாவின் சந்திரயான் 3 நேற்று (ஆகஸ்ட் 23) பெற்றது. இதனையடுத்து உலகின் பல பகுதிகளில் இருந்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அதிலும் நிலவில் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக நிறுத்திய சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழ்நாட்டின் விழுப்புரத்தை சேர்ந்த வீர முத்துவேல் பணியாற்றியுள்ளார்.

விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை வீர முத்துவேலின் பெற்றோர் கண்கலங்க நேரலையில் கண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

அதனைத் தொடர்ந்து வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது மகனின் பணிக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்.

அப்போது, முதல்வரை ‘அண்ணன்’, ‘அண்ணன்’ என்றே விளித்துப் பேசினார் பழனிவேல். இதனால் ஆச்சரியத்தில் ஆழ்ந்த முதல்வர் ஸ்டாலின், தொலைபேசி உரையாடலுக்கு பிறகு அருகில் இருந்தவர்களிடம், ”பொதுவாக என்னிடம் மற்றவர்கள் பேசும் போது,‘ஐயா’ என்றோ ‘சார்’ என்றோ தான் அழைத்து பேசுவார்கள்.  திமுககாரர்கள் மட்டுமே என்னை அண்ணன் என்று பேசுவார்கள். பழனிவேலும் நம்ம கட்சிக்காரர் தான் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரிக்கையில் “ஓய்வுபெற்ற ரயில்வே நிர்வாகியான பழனிவேலின் மகளும், வீரமுத்துவேலின் இரண்டாவது தங்கையுமான காயத்ரியின் திருமணம் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. சந்திரயான் 3 பணி காரணமாக வீர முத்துவேல் திருமணத்திற்கு வரவில்லை.

அப்போது திருமணத்திற்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் கூட திமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் புகைப்படமே இடம்பெற்று இருந்தது.

அதில், தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களோடு,  அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குத்துவிளக்கேற்றும் புகைப்படங்களும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் வீரமுத்துவேலின் வீட்டில் நுழைந்ததும் அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரிடம், பழனிவேல் சால்வை பெறும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் 3 வெற்றியுடன் சாதனை படைத்த வீரமுத்துவேலின் குடும்பத்தினர் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து என்று அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

வாக்னர் படைத் தலைவர் பலி: உக்ரைன் மறுப்பு… ரஷ்யாவுக்கு ஆபத்து!

பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share