கொரோனா – தயார் நிலையில் தமிழகம்: மா.சுப்பிரமணியன்

Published On:

| By Kavi

நாடு முழுவதும் மத்திய அரசு உத்தரவுப் படி இன்று (ஏப்ரல் 10) மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் ஒத்திகை பயிற்சி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 11,000 அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா நோய் தடுப்பு சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை தயார் நிலை குறித்த ஒத்திகை பயிற்சியைச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மருத்துவமனைகளில் உள்ள படுக்கை, வெண்டிலேட்டர், மருத்துவ பணியாளர்கள், மருத்துவர்கள், கொரோனா பரிசோதனை, முகக்கவசம், மருந்துகள், பிபிஇ உடை, ஆக்சிஜன், ஆம்புலன்ஸ் ஆகியவற்றின் கையிருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 64,281 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன.

இதில் 33,264 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், 22,820 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள் உள்ளன. 7,797 தீவிர சிகிச்சை படுக்கைகளும் தயார் நிலையில் இருக்கின்றன.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையங்கள் 342 உள்ளன. நாளொன்றுக்கு 3 லட்சம் பேர் வரை பரிசோதனை செய்யும் வசதி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி 4000 பேருக்கு தினசரி பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கை 11 ஆயிரமாக அதிகரிக்கப்படவுள்ளது.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயம் என அறிவுறுத்தினோம். அதன்படி முகக்கவசம் அணிகிறார்களா என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமானால் பொது இடங்களிலும் மாஸ்க் கட்டாயமாக்குவது தொடர்பாக அறிவிக்கப்படும். முந்தைய கொரோனா பரவலை போல புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு வீரியமாக இல்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு க்ளஸ்டர் பரவலாக இல்லை. தனித்தனியாகவே பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது” என்றார்.

பிரியா

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

வைரலாகும் தர்ஷா குப்தாவின் பீச் க்ளிக்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share