கோயிலில் செல்போனுக்குத் தடை: வி.சி.க. எம்.பி. கேள்வி!

Published On:

| By Prakash

”கோயில்களுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல தடை விதித்திருப்பதும், அதற்கு உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கும் காரணங்களும் ஏற்கத்தக்கவை அல்ல” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. டாக்டர் டி.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி அர்ச்சகர் சீதாராமன், உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க கோயில் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

cellphone use to be banned in temples ravikumar mp question

இந்த நிலையில் இவ்வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன்பு நேற்று (டிசம்பர் 2) விசாரணைக்கு வந்தது. அப்போது திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், ’நவம்பர் 14 முதல் கோயில் பணியாளர்கள் உட்பட அனைவரும் கோயிலுக்குள் செல்போன் கொண்டுச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் செல்போன்களை பாதுகாக்கவும், டோக்கன் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் 15 இடங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் செல்போன் கொண்டுசெல்வது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், கோயில்களின் புனிதம் மற்றும் தூய்மையைக் காப்பாற்றும் வகையில் அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிப்பது மற்றும் பக்தர்கள் கலாச்சார உடை அணிந்து வருவதை உறுதிப்படுத்தும் உத்தரவை அறநிலையத் துறை ஆணையர் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

https://twitter.com/WriterRavikumar/status/1598889817726545921?s=20&t=mPnjLxK9RTjRHc2FLuK7GQ

இந்த நிலையில், ”இதற்கான தடையும், நீதிமன்றத்தின் காரணமும் ஏற்கத்தக்கது அல்ல” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. டாக்டர் டி.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், இன்று (டிசம்பர் 3) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”கோயில்களுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல தடை விதித்திருப்பதும், அதற்கு உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கும் காரணங்களும் ஏற்கத்தக்கவை அல்ல.

இதனால் பொதுமக்களுக்குத் தொந்தரவு மட்டுமல்ல, அறநிலையத் துறைக்கு தேவையற்ற செலவும் ஏற்படும். பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க ஆகமங்களில் அனுமதி உள்ளதா” என அவர் பதிவிட்டுள்ளார்.

ஜெ.பிரகாஷ்

எங்கும் இந்தியாவை கொண்டுசெல்வேன்: பத்மபூஷண் விருது பெற்ற சுந்தர் பிச்சை

மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் அறிவித்த புதிய திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share