கல்லூரிக்குள் நாட்டு வெடி குண்டு வீச்சு?: சென்னையில் அதிர்ச்சி!

Published On:

| By Kavi

Bomb blast inside the gurunanak college

வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலின் போது குண்டுவீச்சு சம்பவம் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை வேளச்சேரியில் குருநானக் கல்லூரி அமைந்துள்ளது. 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 21) யார் பெரியவர்கள் என்று இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பயாலஜி மற்றும் பாதுகாப்பு மூலோபாய ஆய்வுகள் துறை மாணவர்களுக்கு இடையே நடந்த இந்த மோதலில், கல்வீச்சு மற்றும் நாட்டு குண்டுவீச்சு சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி தரப்பில் விசாரித்த போது, “இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு தரப்பு மாணவர்கள் பூண்டு பட்டாசை குவியலாக ஒன்று சேர்த்து உருளையாக்கிப் போட்டுள்ளனர். அதுதான் வெடித்துள்ளது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை” என்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாகக் கிண்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 3 மாணவர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் அது நாட்டு வெடிகுண்டா அல்லது பட்டாசா என்றும் ஆய்வு செய்து வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது என்றால், இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதன் லட்சணம் இது! இதைவிட இந்த அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்?

இந்த மோதலில் ஈடுபட்டோர் மாணவர்கள் தானா அல்லது வேறு ஏதும் பின்னணியில் உள்ளவர்களா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

பிரியா

ராதிகா 60: சீர்மை நிறைந்த ஏறுமுகம்!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா!

ஆசியக்கோப்பை: 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை? வானிலை மையம் தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share