திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடலில் திமுக சார்பில் படகு போட்டி நடைபெற்றது.
இன்று (நவம்பர் 27) உதயநிதி ஸ்டாலின் தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
இதற்காக திமுக நிர்வாகிகள் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து உதயநிதியின் பிறந்தநாளைச் சிறப்பித்து வருகின்றனர். குறிப்பாக இந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் திமுக சார்பில் படகு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டியில் 28-க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகளில், ஒரு படகிற்கு 4 பேர் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் கலந்து கொள்ளும் படகுகள் கடலில் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று திரும்பி வர வேண்டும். அப்படித் திரும்பி வரும் முதல் மூன்று படகுகளுக்குப் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2வது பரிசு ரூ.25 ஆயிரம், 3வது பரிசு ரூ.10 ஆயிரம் என வழங்கப்பட்டது. குமார், கஜேந்திரன், ஆறுமுகம் ஆகிய மூன்று மீனவர்கள் இந்த பரிசு தொகையைப் பெற்று சென்றனர்.
இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் கடற்கரைக்கு வந்த மக்களும் இந்த போட்டியினை கண்டு ரசித்தனர்.
மோனிஷா
யாருடன் கூட்டணி? : டிடிவி தினகரன் சூசகம்!
பர்த் சர்டிஃபிகேட் இல்லனா அவ்வளவுதான்: மத்திய அரசின் புதிய சட்டம்!