சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே பிரபல ரவுடியை கொல்ல முயற்சி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த பாலா என்பவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி சிவக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பாலாவை போலீஸ் கைது செய்தது.
இந்த வழக்கு விசாரணைக்காக இன்று (செப்டம்பர் 5) சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு போலீசார் அவரை அழைத்து வந்துள்ளனர்.
அப்போது அங்கு முகக்கவசம் அணிந்து நின்றிருந்த 5 பேர் கொண்ட கும்பல் பாலாவை கத்தியால் வெட்ட முயன்றது. இதைக்கண்ட பாதுகாப்பில் இருந்த போலீசாரும், வழக்கறிஞர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக பாலாவை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றினர். கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேரில் 2 பேர் தப்பியோடிவிட்டனர். மற்ற 3 பேரை போலீஸ் மடக்கி பிடித்தது.
சிவக்குமார் கொலைக்கு பழி வாங்கவே பாலாவை நீதிமன்றத்திலேயே வைத்து கொல்ல அவரது கூட்டாளிகள் முயற்சி செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிடிபட்ட 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பியோடிய 2 பேரை போலீஸ் தேடி வருகிறது. நீதிமன்றத்தில் போலீஸ் முன்னிலையிலேயே ரவுடியை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலை.ரா