இலங்கை அணிக்கு எதிரான இன்றைய (அக்டோபர் 29) போட்டியில் நியூசிலாந்து அணி 65 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெற்ற போட்டியில் குரூப் 1-ல் இடம் பெற்ற நியூசிலாந்து – இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதின.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
பிலிப்ஸ் அதிரடி சதம்!
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார் பின் ஆலன்(1). அதனை தொடர்ந்து கான்வே 1 ரன்னிலும், வில்லிம்யசன் 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் 4 ஓவரிலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்தது நியூசிலாந்து. அதன்பின்னர் மிட்செல் மற்றும் பிலிப்ஸ் இருவரும் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர்.
இதில் அதிரடியாக ஆடிய பிலிப்ஸ் நடப்பு உலகக்கோப்பையின் 2வது சதத்தை பதிவு செய்தார்.
எனினும் அவருக்கு துணையாக மிட்செல் தவிர யாரும் பேட்டிங் செய்யவில்லை.
இதனால் 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக அந்த அணியில் 64 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் குவித்தார்.
7 ஓவரில் 5 விக்கெட்டுகள்!
இதனைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி, ஆரம்பம் முதல் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.
முதல் 7 ஓவர்களிலேயே பதும் நிசாங்க, குசால் மெண்டிஸ், தனஞ்செயா, அசலங்கா, குணரத்னே ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
30 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணியை காப்பாற்ற கேப்டன் ஷனகா மற்றும் ராஜபக்ஷே ஆகியோர் போராடினர்.
எனினும் நியூசிலாந்து பந்துவீச்சுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் போனது. அவர்களை தொடர்ந்து மற்ற வீரர்களும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.
இதனால் 19.2 ஓவரில் 102 ரன்களுக்கு இலங்கையை ஆல் அவுட் செய்த நியூசிலாந்து அணி 65 ரன்னில் வெற்றி பெற்றது.
கடைசி இடத்திற்கு சென்ற இலங்கை!
இலங்கை அணியில் சனகா மற்றும் ராஜபக்சே ஆகியோரை தவிர மற்ற 8 வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியதுடன் அரையிறுதி வாய்ப்பும் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
அதேவேளையில் இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா