WPL 2024: எல்லிஸ் பெர்ரி டூ ஸ்ரேயங்கா பாட்டீல்… யாருக்கு எந்த விருது? எவ்வளவு பரிசுத்தொகை?

Published On:

| By Manjula

2024 மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக்கொண்டன.

இப்போட்டியில், பலமும் அனுபவமும் நிறைந்த டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம், ஆர்சிபி ரசிகர்களின் கோப்பை தாகத்தையும், பெங்களூர் மகளிர் அணி 2 சீசன்களிலேயே தீர்த்து வைத்தது.

இந்த வெற்றியின் மூலம், பெங்களூர் அணி மகளிர் பிரீமியர் லீக் கோப்பை மட்டுமின்றி, ரூ.6 கோடி பரிசுத்தொகையையும் வென்றது.

மறுமுனையில், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து ரன்னர்-அப் ஆன டெல்லி அணிக்கு, ரூ.3 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

எல்லிஸ் பெர்ரி

இந்த தொடர் முழுவதும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு, பெங்களூர் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார், எல்லிஸ் பெர்ரி.

இவர் 9 இன்னிங்ஸ்களில், 2 அரைசதங்களுடன் 347 ரன்கள் சேர்த்து, இந்த தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இதற்காக, எல்லிஸ் பெர்ரிக்கு இந்த தொடருக்கான ‘ஆரஞ்சு கேப்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரேயங்கா பாட்டீல்

பேட்டிங்கில் எல்லிஸ் பெர்ரியை போல, பவுலிங்கில் ஆர்சிபி அணிக்காக மிக முக்கிய பங்கு வகித்தார், ஸ்ரேயங்கா பாட்டீல்.

குறிப்பாக, எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டியில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு இவரது பந்துவீச்சு மிக முக்கிய பங்கு வகித்தது.

அப்படி இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக பந்துவீசிய ஸ்ரேயங்கா பாட்டீல், 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம், இந்த தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீராங்கனைகள் பட்டியலிலும் அவர் முதலிடத்தை பிடித்தார். அதற்காக, ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு ‘பர்பிள் கேப்’ விருது பரிசாக வழங்கப்பட்டது.

தீப்தி சர்மா

இவர்களை போலவே, உபி வாரியர்ஸ் அணிக்காக இந்த தொடர் முழுவதுமே ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், தீப்தி சர்மா.

பந்துவீச்சில் 8 போட்டிகளில், அவர் ஒரு 4-விக்கெட் ஹால் உட்பட 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதேபோல, பேட்டிங்கில் 3 அரைசதங்கள் உட்பட 295 ரங்களையும் விளாசியிருந்தார்.

தீப்தி சர்மாவின் இந்த சிறப்பான ஆட்டத்திற்காக, அவருக்கு இந்த தொடரின் ‘மதிப்புமிக்க வீராங்கனை’ விருது வழங்கப்பட்டுள்ளது.

ஷபாலி வர்மா

அதிரடிக்கு பெயர்போன, இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான ஷபாலி வர்மா, இந்த தொடர் முழுவதும் 20 சிக்ஸ்களை விளாசியிருந்தார்.

இதன்மூலம், இந்த தொடரில் அதிக சிக்ஸ்கள் விளாசிய வீராங்கனைகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அவருக்கு, ‘சின்டெக்ஸ் சிக்ஸஸ் ஆஃப் தி சீசன் 2024’ விருது வழங்கப்பட்டது.

ஜியார்ஜியா வார்ஹம்

அதிரடியாக விளையாடி, பெங்களூர் அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்த மற்றொரு வீராங்கனை ஜியார்ஜியா வார்ஹம். இந்த தொடரில் அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 163.23.

இதன்மூலம், இந்த தொடரில் அதிக பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீராங்கனைகள் பட்டியலில் வார்ஹம் முதலிடம் பிடித்தார்.

அதற்காக அவருக்கு ‘Punch.ev எலெக்ட்ரிக் ஸ்ட்ரைக் ஆஃப் தி சீசன் 2024’ விருது வழங்கப்பட்டுள்ளது.

எல்லிஸ் பெர்ரி, ஸ்ரேயங்கா பாட்டீல், ஜியார்ஜியா வார்ஹம், தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா ஆகிய ஐவருக்கும் பரிசுத்தொகையாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டது.

முதன்முறையாக கோப்பை வென்ற பெங்களூர் மகளிர் அணிக்கு, உலகம் முழுவதுமிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதேபோல ஆர்சிபி ஆண்கள் அணியும் கோப்பை வென்று, ரசிகர்களின் 16 வருட கால ஏக்கத்தினை தீர்க்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மகிழ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

GOLD RATE: ‘ஸ்வீட் ஷாக்’ கொடுத்த தங்கம் விலை

போதைப் பரவல் : பொய்யான தோற்றத்தை உருவாக்கும் ஸ்டாலின்… எடப்பாடி தாக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share