டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் கனடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்கா அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று (ஜூன் 2) தேதி தொடங்கி வருகிற ஜூன்-29ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியாக ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளான கனடா அணியும், போட்டியை நடத்தும் அமெரிக்கா அணியும் மோதின.
அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய கனடா அணி அதிரடியாக விளையாடி, 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் நவ்நீத் தலிவால் 61 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் நிக்கோலஸ் கிர்டோன் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அமெரிக்கா அணியில் அலிகான், ஹர்மீத் சிங் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.
தொடர்ந்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது அமெரிக்கா அணி.
தொடக்க வீரர்கள் ஸ்டீவன் டெய்லர்(0) மற்றும் மோனங்க் பட்டேல்(16) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
எனினும் அடுத்த இணைந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் ஜோடி ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் அரைசதம் அடித்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறுபக்கம் கனடா பவுலர்களை துவம்சம் செய்த ஆரோன் ஜோன்ஸ் சிக்சர் அடித்து அமெரிக்க அணியை வெற்றி பெற செய்தார். இதன்மூலம் அமெரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 94 ரன்கள் ஆரோன் ஜோன்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற தனது முதல் போட்டியிலேயே அமெரிக்கா அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அருணாச்சல், சிக்கிம் வாக்கு எண்ணிக்கை : ஆட்சியில் அமரும் ஆளும் கட்சிகள்?
சென்னை மெட்ரோ: மே மாதத்தில் பயணம் செய்தோர் எத்தனை லட்சம் பேர் தெரியுமா?