டி20 தொடர் முதல் போட்டி: இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

Published On:

| By Monisha

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் முதல் போட்டி பஞ்சாபின் மொகாலியில் நேற்று (செப்டம்பர் 20) தொடங்கியது. இந்த இரு அணிகளுக்கிடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

நேற்று டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.

ரோகித் ஷர்மா 11 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி கே.எல். ராகுலுடன் விளையாடினார்.

ஆனால் விராட் கோலி 2 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்ததாகக் களத்தில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

இந்நிலையில் தொடர்ந்து விளையாடிய கே.எல். ராகுல் 35 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து அரைசதத்தைக் கடந்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கி சூர்ய குமாருடன் இணைந்தார்.சூர்யகுமார் 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக அக்சருடன் இணைந்து ஹர்திக் ஆட்டத்தைத் தொடர்ந்தார். 6 ரன்களில் அக்சர் ஆட்டமிழக்க ஹர்த்திக்குடன் இணைந்த தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் வெளியேறினார்.

t20 wolrd cup 2022 Australia beat India by 4 wickets

ஹர்த்திக் தொடர்ந்து சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதத்தை கடந்தார். 30 பந்துகளில் 71 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

20 ஓவர் இறுதியில் இந்தியா அணி 208 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் 22 ரன்களில் வெளியேற கேமரூன் க்ரீன் 30 பந்துகளில் 61 ரன்களை விளாசினார்.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் 21 பந்துகளில் 45 ரன்களை சேர்த்தார். இதனால் 19.2 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 211 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டி நாக்பூரில் செப்டம்பர் 23 அன்று நடைபெறுகிறது.

இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்த நிலையில் டி20யில் அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டி20 முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

மோனிஷா

தாக்கப்படும் தமிழக மீனவர்கள் – வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு: திருமாவளவன்

ராகுல் காந்தியுடன் இணைந்த சச்சின் பைலட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share