Singapore Open: 6 தொடர் தோல்விகள்… சறுக்கும் பி.வி சிந்து…!

Published On:

| By Kavi

PV Sindhu's 6th loss

PV Sindhu: சிங்கப்பூரில் கடந்த மே 28 அன்று முதல் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் பல இந்திய நட்சத்திரங்கள் பங்குபெற்றுள்ள நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர ஜோடியான சாத்விக் மற்றும் சிராக் இணை முதல் சுற்றிலேயே மேட்ஸ் வெஸ்டர்கார்ட் மற்றும் டேனியல் லான்ட்கார்ட் இணையிடம் 20-22, 18-21 என நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினர்.

அதேபோல, அதே பிரிவில் மற்றோரு இந்திய இணையான கிருஷ்ணா பிரசாத் கார்கா மற்றும் சாய் பிரதீக் இணையும், லியாங் வெய்கிங் மற்றும் வாங் சாங் இணையிடம் 16-21, 22-24 என நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய நட்சத்திரங்களான கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்சயா சென் ஆகியோரும் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

இந்த பிரிவில், மற்றோரு இந்திய நட்சத்திரமான எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் வெற்றி பெற்றாலும், 2வது சுற்றில் கென்டா நிஷிமோட்டோவிடம் 13-21, 21-14, 15-21 என தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஒரு எளிய வெற்றியுடன் 2வது சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் தங்க மங்கை பி.வி.சிந்து, 2வது சுற்றில் களத்தில் அவரது பரம எதிரியாக கருதப்படும் கரோலினா மரினை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், முதல் சுற்றை சிந்து 21-13 என எளிதாக கைப்பற்றிய நிலையில், 2வது சுற்றில் மீண்டு வந்த மாரின், 21-11 என அந்த செட்டை கைப்பற்றினார். இதை தொடர்ந்து, ஆட்டம் 3வது செட்டிற்கு சென்றது.

3வது செட்டில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து, 15-11 என முன்னிலை பெற்றிருந்தார். அந்த நேரத்தில் பி.வி.சிந்துவே வெற்றி பெறுவார் என எண்ணியிருந்த நிலையில், அவர் அடுத்தடுத்து 3 புள்ளிகளை கண்ணிமைக்கும் நேரத்தில் இழக்க, ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது.

பின், இருவரும் அடுத்தடுத்து சமமாகவே புள்ளிகளை பெற்றுவந்த நிலையில், இறுதியில் மரின் 22-20 என அந்த செட்டை கைப்பற்றினார்.

இதை தொடர்ந்து 21-13, 11-21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த பி.வி சிந்து, சிங்கப்பூர் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.

இது கரோலினா மரினுக்கு எதிராக பி.வி சிந்து சந்திக்கும் 6வது தொடர் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக, கரோலினா மரினுக்கு எதிராக 6 ஆண்டுகளுக்கு முன்னர் 2018-லேயே பி.வி.சிந்து வெற்றி பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பி.வி.சிந்து கடைசியாக 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற சிங்கப்பூர் ஓபன் தொடரிலேயே பட்டம் வென்றார் என்பதும், அதன் பிறகு 2 ஆண்டுகளாக விளையாடிய எந்த தொடரிலும் பட்டம் வெல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சிங்கப்பூர் ஓபன் தொடரில், ஆடவர் ஒற்றையர், இரட்டையர், மகளிர் ஒற்றையர், கலப்பு இரட்டையர் என அனைத்து பிரிவுகளிலும், இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வியடைந்து வெளியேறினர்.

மகளிர் இரட்டையர் பிரிவில் மட்டும், இந்தியாவின் த்ரீஷா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் இணை, 2வது சுற்றில் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பேக் ஹா னா மற்றும் லீ சோ ஹீ இணையை 21-9, 14-21, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

காலிறுதியில், இந்த இணை தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள கிம் சோ யோங் மற்றும் கோங் ஹீ யோங் இணையை எதிர்கொள்ள உள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வனத்துறையினர் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானை!

டாப் 10 நியூஸ் : மோடி தியானம் முதல் பிரஜ்வல் ரேவண்ணா கைது வரை!

பியூட்டி டிப்ஸ்: முகத்தில் வழிந்தோடும் வியர்வை… தீர்வு என்ன?

கிச்சன் கீர்த்தனா : பாகற்காய்- வேர்க்கடலைக் குழம்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel