உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லாதது சற்று வருத்தமாக உள்ளது என்று பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை செஸ் தொடரில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சனிடம் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். இதனால் 2வது இடம் பிடித்து பிரக்ஞானந்தா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 30) காலை சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு மேள, தாளங்களுடன் தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, “என்னை வரவேற்க நிறைய பேர் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தமுறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வது தான் இலக்கு.
சிறிது இடைவேளை எடுத்துவிட்டு ஆட போகிறேன். தங்கம் வெல்லாதது சிறிது வருத்தமாகவே உள்ளது. வெள்ளிப்பதக்கம் வென்றதே நல்ல ரிசல்ட் தான். விஸ்வநாதன் ஆனந்த் கோல்டன் ஜெனரேஷன் என்று கூறியது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார்.
பிரக்ஞானந்தா அம்மா, “என் மகன் உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. உலக கோப்பை போட்டியில் மகன் வென்றதை நான் பார்த்தபோது புகைப்படம் எடுத்தது எனக்கு தெரியாது. அந்த புகைப்படங்கள் எல்லோரையும் சென்றடைந்திருக்கிறது. போட்டியின் போது பிரக்ஞானந்தாவுக்கு ஆரோக்கியமான உணவை சமைத்து கொடுப்பது தான் என்னுடைய வேலை. பிரக்ஞானந்தாவுக்கு காய்கறி உணவுகள் அதிகமாக சமைத்து கொடுப்பேன்.
அவனுக்கு அழுத்தம் கொடுக்க மாட்டேன். உன்னால் முடியும் என்று நம்பிக்கை கொடுப்பேன். குழந்தைகள் எதில் ஆர்வமாக உள்ளோர்களோ அவர்களை பெற்றோர் அதில் மேம்படுத்த வேண்டும் ” என்று தெரிவித்தார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலினை பிரக்ஞானந்தா அவரது தாயுடன் சென்று சந்தித்தார். அப்போது சால்வை அணிவித்து பிரக்ஞானந்தாவை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின் அவருக்கு ரூ.30 லட்சத்திற்கான பரித்தொகை காசோலையை வழங்கினார்.
செல்வம்
396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!