ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கி நடைபெறுகிறது. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
இதற்கிடையே, பாகிஸ்தானில் மைதானங்களின் பராமரிப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது.
எனினும், இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. அனைத்து பணிகளும் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டிக்கான டிக்கெட் விலைகளை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பணம் 1,000 (இந்திய மதிப்பு 310) குறைந்த டிக்கெட் விலை ஆகும். கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறுகிறது. அனைத்து நகரங்களிலும் ஒரே விதமான டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் டிக்கெட்டுகளின் விலை மட்டும் நகரங்களுக்கு நகரம் வேறுபடுகிறது. லாகூரில் நடைபெறும் அரையிறுதி ஆட்டத்துக்கு அதிகபட்சமாக பிரீமியம் டிக்கெட் விலை பாகிஸ்தான் பணத்தில் 25 ஆயிரம். இதன் இந்திய மதிப்பு ரூ.7,764 ஆகும். அனைத்து ஆட்டங்களுக்குமான விவிஐபி டிக்கெட் பாகிஸ்தான் பணத்தில் ரூ.12 ,000 . இதன் இந்திய மதிப்பு ரூ.3,726 ஆகும்.
சாம்பியன்ஸ் டிராபியில் முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. மார்ச் 9 ஆம் தேதி லாகூரில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்பட்சத்தில் துபாயில் இறுதிப்போட்டி நடைபெறும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்