ஹர்மன்ப்ரீத் ருத்ரதாண்டவம்: நாக்-அவுட்டுக்கு முன்னேறிய MI மகளிர் அணி!

Published On:

| By Selvam

WPL Live Score 2024

டந்த பிப்ரவரி 23 அன்று துவங்கிய 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடர் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டி வருகிறது. லீக் சுற்றின் தனது 7வது போட்டியில், குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணியை எதிர்கொண்ட நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் ருத்ரதாண்ட ஆட்டத்தால் ஒரு த்ரில் வெற்றியை பதிவு செய்து, இந்த தொடரில் முதல் அணியாக நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடரில் நீடிக்க வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய குஜராத் அணிக்கு, துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லாரா வால்வர்ட் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

WPL Live Score 2024

ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் பெத் மூனி மற்றும் தயாளன் ஹேமலதா, பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்டு, ராக்கெட் வேகத்தில் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இவர்கள் அதிரடியால் 10 ஓவர்களில் குஜராத் அணி 101 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்த நிலையில், பெத் மூனி 66 (35) ரன்களுக்கும், தயாளன் ஹேமலதா 74 (40) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இவர்களின் விக்கெட்டை தொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் சேர்த்தது. மும்பை அணிக்காக சைக்கா இஷ்க் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

191 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு, யாஸ்திகா பாட்டியா நல்ல துவக்கம் கொடுத்தாலும், மறுமுனையில் ஹேலெய் மேத்யூஸ் 18 ரன்களுக்கும், நாட் சிவர்-பிரன்ட் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

WPL Live Score 2024

இதன் காரணமாக, 10 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 76 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. 14வது ஓவரில் யாஸ்திகா பாட்டியா ஆட்டமிழக்க, அந்த ஓவர் முடிவில் மும்பை அணி 100 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

36 பந்துகளில் 92 ரன்கள் தேவை என்ற மிகவும் இக்கட்டான சூழலுக்கு மும்பை அணி தள்ளப்பட்ட நிலையில், தனது ருத்ரதாண்டவத்தை துவங்கிய அந்த அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். 19.5 ஓவர்களில் மும்பை அணி 191 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. 10 பவுண்டரி, 5 சிக்ஸ்களுடன் 95 ரன்கள் விளாசி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்மன்ப்ரீத் ‘ஆட்ட நாயகி’ விருதையும் வென்றார்.

இந்த வெற்றி மூலம், விளையாடிய 7 போட்டிகளில் 5-இல் வெற்றி பெற்று, 10 புள்ளிகளுடன் முதல் அணியாக நாக்-அவுட் சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெற்றுள்ளது.

மறுபுறத்தில், இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 1-இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள குஜராத் அணி, கிட்டத்தட்ட தனது நாக்-அவுட் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது.

இன்னும் 4 லீக் சுற்று ஆட்டங்களே மீதமுள்ள நிலையில், மீதம் இருக்கும் 2 நாக்-அவுட் சுற்று இடங்களுக்காக டெல்லி, பெங்களூரு மற்றும் உ.பி ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்திக்கொள்ள உள்ளன.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயசூரியன் நாடு: பகலில் தொடங்கிய ரவுண்டு!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்: கண்களைச் சுற்றி கருவளையமா… கவலை வேண்டாம்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்.. உணவுகளை வீணாக்காமல் இருப்பது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share