IPL2024: தோனியின் இடத்தை நிரப்ப… 3 வீரர்களை டார்கெட் செய்யும் சென்னை அணி?

Published On:

| By Manjula

தோனியின் இடத்தை நிரப்ப, 3 வீரர்களை சென்னை அணி மினி ஏலத்தில் டார்கெட் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அடுத்த ஆண்டு வரப்போகும் ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. சென்னை அணியை பொறுத்தவரை இந்த 17-வது சீசன் தான் தோனி ஆடும் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக்கூடும்.

இதனால் தோனிக்கு அடுத்ததாக யார் சென்னை அணியின் கேப்டன் ஆகப்போகிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அவருடைய விக்கெட் கீப்பர் ரோலுக்கும் பொருத்தமான வீரரை தேடும் கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.

இந்த நிலையில் வரும் 19-ம் தேதி துபாயில் நடைபெறவுள்ள மினி ஏலத்தில் சென்னை அணி தோனிக்கு மாற்றாக 3 விக்கெட் கீப்பர்களை குறிவைக்க போவதாக கூறப்படுகிறது. அதன்படி யார் அந்த 3 வீரர்கள் என்பதை பார்க்கலாம்.

நாராயண் ஜெகதீசன்

தமிழகத்தை சேர்ந்த நாராயண் ஜெகதீசன் கடந்த 2023 ஐபிஎல் ஏலத்தின் போதே சென்னை அணியால் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு ஏற்ப அவருக்காக கொல்கத்தா அணியுடன் சென்னை முட்டி மோதியது.  ஆனால் 90 லட்ச ரூபாயை சென்னை அணி அவருக்காக செலவழிக்க தயங்க கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

அப்போதே சென்னை அணி அவரை எடுத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். தற்போது கொல்கத்தா அணி அவரை விடுவித்து இருப்பதால் இந்த ஆண்டு ஏலத்தில் ஜெகதீசனை சென்னை அணி கண்டிப்பாக எடுக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

குறிப்பாக பேட்டிங், விக்கெட் கீப்பிங் இரண்டிலும் ஜெகதீசன் கில்லியாக இருப்பதால் கடந்த ஆண்டு செய்த தவறினை திருத்தி கண்டிப்பாக அவரை சென்னை அணி ஏலத்தில் எடுக்கலாம்.

59 டி20 போட்டிகளில் ஆடியிருக்கும் ஜெகதீசன் 6 அரை சதங்களுடன் 1195 ரன்களை எடுத்துள்ளார்.  தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஜெகதீசன் ஒரு சிறந்த டி20 வீரராக தன்னை நிரூபிப்பார் என நம்பலாம்.

கே எஸ் பரத்

இந்திய அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த கே.எஸ்.பரத் கடந்த ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்காக ஆடியிருக்கிறார்.

ஆனால் அந்த அணியில் ஏற்கனவே அனுபவம் வாய்ந்த விருத்திமான் சஹா மற்றும் மேத்யு வாடே போன்ற விக்கெட் கீப்பர்கள் இருப்பதால் இவரை குஜராத் அணி தற்போது விடுவித்துள்ளது.

ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தாலும் கூட சென்னைக்கு சிறந்த விக்கெட் கீப்பராகவும் அம்பாதி ராயுடு இடத்துக்கு  மாற்று வீரராகவும் இருப்பார்.

இதனால், பரத்தை ஏலத்தில் சென்னை அணி எடுப்பதற்கு எக்கச்சக்க வாய்ப்புகள் இருக்கின்றன. 74 டி20 மேட்ச்களில் ஆடியிருக்கும் பரத் 1266 ரன்களுடன் 110.85 என்ற ஸ்ட்ரைக் ரேட்டினை வைத்திருக்கிறார்.

கடைசியாக இவர் குஜராத் அணியால் 1.20 கோடிக்கு வாங்கப்பட்டார்.

சாம் பில்லிங்க்ஸ்

ஏற்கனவே சென்னை அணிக்காக ஆடியிருக்கும் சாம் பில்லிங்சை சென்னை அணி மீண்டும் ஏலத்தில் எடுக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

30 டி20 போட்டிகளில் ஆடி 503 ரன்களை எடுத்திருக்கும் சாம் பில்லிங்ஸ் 2018-ம் ஆண்டு சென்னை அணிக்காக அடித்த 56 ரன்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இங்கிலாந்து நாட்டுக்காக ஆடிவரும் சாம் சொந்த அணியில் கவனம் செலுத்துவதற்காக ஐபிஎல் ஏலத்தில் பங்கு பெறாமல் இருந்தார். தற்போது துபாயில் நடைபெறவுள்ள மினி ஏலத்தில் சாம் மீண்டும் பங்கு பெறுகிறார்.

பேட்ஸ்மேன் என்பதை தாண்டி ஒரு நல்ல விக்கெட் கீப்பர் இடத்தையும் சாம் நிரப்பக்கூடியவர்.அதோடு சென்னை அணியில் ஏற்கனவே இருந்தவர் என்பதும் அவருக்கு கூடுதல் பிளஸ்.

எனவே சாம் பில்லிங்சை ஏலத்தில் எடுக்க சென்னை அணி அதிக முனைப்பு காட்டலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

வெள்ளம் வடிந்துவிட்டாலும் நீங்கள் செய்ய வேண்டியது என்ன? – சுகாதாரத்துறையின் ஆலோசனைகள்!

மழை பாதிப்புக்கு திமுக அரசே பொறுப்பு: எடப்பாடி தாக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share