இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி2௦ போட்டி இன்று (டிசம்பர் 10) இரவு 7.30 மணிக்கு டர்பனில் நடைபெறவுள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3 டி2௦ போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை சூர்யகுமார், ஜடேஜா தவிர மற்ற அனைவரும் இளம் வீரர்களே. இதனால் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்வது சவாலாக இருக்கும்.
உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வரை வந்து தென் ஆப்பிரிக்கா அணி வெளியேறியது. தங்களது சொதப்பல்களால் அவர்கள் தொடரில் இருந்து வெளியேறினார்களே தவிர திறமையான வீரர்கள் இல்லாமல் இல்லை.
இந்திய அணியை பொறுத்தவரை யஷஸ்வி ஜெய்சால், ஷூப்மன் கில், ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ரிங்கு சிங் என பேட்டிங் வலுவாகவே உள்ளது.
பவுலிங்கிலும் ஜடேஜா, ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், தீபக் சாகர் என அனுபவமும், இளமையும் நிறைந்த வீரர்கள் இருக்கின்றனர்.
அதே நேரம் தென் ஆப்பிரிக்காவையும் நாம் குறைத்து எடை போட முடியாது.
பேட்டிங்கில் எய்டன் மார்க்ரம், ஹெய்ன்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரீசா ஹென்ட்ரிக்ஸ் என ஒட்டுமொத்தமாக ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர்கள் உள்ளனர்.
பவுலிங்கை பொறுத்தவரை காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்க்கியா, லுங்கி நிகிடி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது.
என்றாலும் மார்கோ யான்சன், ஜெரால்டு கோட்ஸி, ஆண்டில் பெலுக்வாயோ, கேசவ் மகராஜ், தப்ரைஸ் ஷம்சி என இந்திய வீரர்களுக்கு சவால் அளிக்கக்கூடிய வீரர்கள் அணியில் உள்ளனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி 20 தொடரை 4 – 1 என வென்ற உற்சாகத்தோடு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
சொந்த மண், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் பங்கேற்காதது என இந்தியாவுக்கு சாதகமான விஷயங்கள் அந்த தொடரில் இருந்தன. இதனால் எளிதாக ஆஸ்திரேலிய அணியை இந்தியாவால் வீழ்த்த முடிந்தது.
ஆஸ்திரேலியாவை போல எளிதாக தென் ஆப்பிரிக்காவை, இந்திய அணி வீழ்த்த முடியாது.
சொந்த மண் அணியின் பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் பங்கேற்பது என தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமான விஷயங்கள் நிறைய உள்ளன. எனவே இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
டர்பன் மைதானத்தை பொறுத்தவரை இங்கு இதுவரை 22 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 11 போட்டிகளிலும், சேஸிங் செய்த அணி 9 போட்டிகளிலும் வென்றுள்ளது.
எனவே டாஸ் இங்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அதனால் வெற்றிக்காக இரண்டு அணிகளும் கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
’தளபதி 68’: ஓபனிங் சாங் வேற லெவல்… அப்டேட் கொடுத்த நடிகர்
’லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேண்டாம்: ஷாக் கொடுத்த நயன்தாரா