தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.
இதற்காக 3 விதமான அணிகளை பிசிசிஐ தேர்வு செய்துள்ள நிலையில், முதலாவதாக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், கெபெர்ஹா செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் நேற்று (டிசம்பர் 12) இரவு நடைபெற்ற 2வது போட்டியில், முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டென் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியின் 2 துவக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில், டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தனர். ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ், நொடிப்பொழுதில் ஆட்டத்தின் போக்கை மாற்றி, பவர்-பிளே முடிவில் 59 ரன்களை குவித்து அசத்தினர்.
திலக் வர்மா 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து அசத்தினார். இவர் 36 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
பின் களத்திற்குள் நுழைந்த ரிங்கு சிங், 9 பவுண்டரி, 2 சிக்ஸ்களுடன் 39 பந்துகளில் 68 ரன்கள் விளாச, இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்திருந்தது. தென் ஆப்பிரிக்காவுக்காக, ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
இந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் துவங்கிய போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்காவுக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி விளையாட, தென் ஆப்பிரிக்காவுக்கு துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் மேத்யூ ப்ரெட்ஸ்கி, ஆரம்பத்திலேயே அதிரடி காட்டினர்.
முதல் ஓவர் முடிவில் 14, 2வது ஓவர் முடிவில் 38, 3வது ஓவரில் ப்ரெட்ஸ்கி (16 ரன்கள்) ஆட்டமிழந்தபோதும், அந்த ஓவர் முடிவில் 43 ரன்கள் என புயல் வேகத்தில் ரன்களை சேர்த்தனர். அடுத்து வந்த கேப்டன் எய்டென் மார்க்ரமும் இந்த அதிரடியை தொடர, தென் ஆப்பிரிக்கா 6 ஓவர்கள் முடிவில் 66 ரன்கள் சேர்த்தது.
பின், 8, 9, 10 ஆகிய ஓவர்களில் மார்க்ரம், எய்டென் மார்க்ரம் மற்றும் ஹெய்ன்ரிச் கிளாஸன் என 3 அதிரடி தென் ஆப்பிரிக்க பேட்டர்களை ஃபெவிலியனுக்கு அனுப்பி, தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸ்க்கு இந்திய பவுலர்கள் ஒரு ஸ்பீடு பிரேக்கர் போட்டனர்.
இருப்பினும், 10 ஓவர்களில் 116 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே இருந்தது. 13வது ஓவரில் மில்லரின் விக்கெட்டை முகேஷ் குமார் கைப்பற்ற, 12 பந்துகளில் 12 ரன்கள் என போட்டி சுவாரஸ்ய கட்டத்தை எட்டியது.
இந்த இடத்தில் இருந்து தென் ஆப்பிரிக்காவை இந்தியா தடுத்து நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் எழுந்த நிலையில், அடுத்த ஓவரிலேயே அந்த 14 ரன்களை குவித்த தென் ஆப்பிரிக்கா அணி, இந்த போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 180 ரன்கள் குவித்தபோதும், தனது 4 ஓவர்களில் வெறும் 18 ரன்களை மட்டுமே வழங்கி, சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை கைப்பற்றிய தப்ரைஸ் ஷம்ஸி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மகிழ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : ஆனியன் புடலை ரிங்ஸ்
பியூட்டி டிப்ஸ்: நகங்கள்… அழகுக்கு மட்டுமல்ல… ஆரோக்கியத்துக்கும் அவசியம்!