2024 ஆம் ஆண்டுக்கான 17-வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 அன்று துவங்கவுள்ளது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொள்ள உள்ளன.
போட்டி, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரரான டெவன் கான்வே 2024 ஐபிஎல் தொடரில் இருந்து, விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற டி20 தொடரின் 2-வது போட்டியின்போது இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டதை அடுத்து, டெவன் கான்வே உடனடியாக போட்டியில் இருந்து விலகினார்.
முன்னதாக, அவருக்கு எக்ஸ்-ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் கான்வேவுக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3-வது டி20 மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், டெவன் கான்வேவுக்கு மேலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், எலும்பு முறிவு ஏற்படவில்லை என்றாலும், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சைக்கு பின், கான்வே 8 வாரங்களுக்கு கட்டாய ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், மே மாதம் வரை அவரால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் இருந்தும் அவர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான துவக்க ஆட்டக்காரராக திகழ்ந்த டெவன் கான்வே, 2022 ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 252 ரன்களை எடுத்தார்.
தொடர்ந்து 2023 ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 672 ரன்களையும், சென்னை அணிக்காக சேர்த்துள்ளார். மேலும், 9 அரைசதங்களையும் அவர் விளாசியுள்ளார்.
ஒருவேளை, டெவன் கான்வே தொடரில் இருந்து விலகும் பட்சத்தில், அவருக்கு பதிலாக மற்றொரு இளம் நியூசிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
–மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…