தென்னாப்பிரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்முறையாக மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்று நியூசிலாந்து மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3ஆம் துவங்கி நடைபெற்று வந்தன.
இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், அரையிறுதி சுற்றுக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய மகளிர் அணிகள் தகுதி பெற்றன.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தென்னாப்பிரிக்கா மகளிர் அணியும், இங்கிலாந்தை தோற்கடித்து நியூசிலாந்து மகளிர் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
அதன்படி நேற்று (அக்டோபர் 20) இரவு துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்து அசத்தியது.
அந்த அணியில் தொடக்க வீரர் சுஜி பாட்ஸ் (32), ஆல் ரவுண்டர் அமெலியா கிர் (43), ப்ரூக் ஹலிடே (38) ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, 159 ரன்கள் இலக்கை துரத்தி களமிறங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி பவர்பிளே முடிவில் 50 ரன்களை கடந்தது.
ஆனால் 7வது ஓவரை வீசிய ஜோனஸ், தொடக்க வீரரான தஸ்மின் விக்கெட்டை கைப்பற்றி அந்த அணியின் அஸ்திவாரத்தில் கல்லெறிந்தார்.
அதன்பின்னர் கேப்டன் லூரா வெல்வர்ட் (33) தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 20 ஓவர்களில் 126 ரன்களை மட்டும் சேர்த்தது.
இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதல் முறையாக ஐசிசி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
மேலும் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகி மற்றும் தொடர் வீராங்கனை விருதையும் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் நியூசிலாந்து மகளிர் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான அமெலியா கிர்.
தொடரும் சோகம்!
கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 19 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தோல்வியை பறிகொடுத்தது தென்னாப்பிரிக்கா அணி.
அதே போன்று கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 போட்டி உலகக்கோப்பை தொடரில் இறுதிவரை போராடிய தென்னாப்பிரிக்கா ஆடவர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் கோப்பையை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நியூஸிலந்து மகளிர் அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியிலும் தென்னாப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வெல்லும் கனவு மீண்டும் ஒருமுறை கானல் நீரானது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிக் பாஸ் சீசன் 8 : அசிங்கப்பட்ட அர்னவ்… வைச்சு செய்த சேதுபதி
மார்ச் 31-ம் தேதிக்குள் ரூ.1,800 கோடி வரி வசூல்: சென்னை மாநகராட்சியின் அதிரடி திட்டம்!