இரண்டாம் எலிசபெத் மகாராணியின் ஆட்சி மற்றும் அவரது வாழ்வின் நிகழ்வுகள் பற்றிய வெற்றிகரமான நாடகம் தி கிரவுன்.
ராணியின் மரணத்தைத் தொடர்ந்து இந்த நாடகத்தின் சீசன் 6 பாகத்தின் தயாரிப்பை நிறுத்தக்கூடும் என்று அதன் ஆசிரியரான பீட்டர் மோர்கனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிப்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தி கிரவுன் நாடகம் என்பது இங்கிலாந்தில் புகழ் பெற்ற தொலைக்காட்சி வரலாற்று நாடகம். ராணி எலிசபெத்தின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடகம் நான்கு சீசன்கள் வெளியாகியிருக்கிறது.
ஐந்தாவது சீசன் தயாரிப்பு நிறைவடைந்துவிட்ட நிலையில்தான் ராணி காலமானார்.
ராணி என்றால் ஆணையிட்டால் அது நடந்துவிடும், ஆயிரம் சேவகர்கள் வணக்கம் வைப்பார்கள், கரன்சியில் மிதக்கும் வாழ்க்கை என்றெல்லாம் ஒரு கற்பனை எல்லாருக்குமே இருக்கும்.
ஆனால் எலிசபெத் ராணியின் இன்னொரு உலகத்தைப் பற்றிய உணச்சிகரமான பரிமாணத்தை அந்த நாடகம் வெளிப்படுத்தியது.
லண்டனில் வசிக்கும் தமிழ் பத்திரிகையாளர் லாவண்யா இதுகுறித்து தனது ஃபேஸ்புக் தளத்தில் எழுதியதைப் பார்த்தாலே கிரவுன் பற்றிய ஓரளவு புரிதல் நமக்கு வரும்.
“லண்டன் வந்த புதிதில், டி.வியில் உங்களைப் பார்க்கும் போது, ‘காசு கொழிக்கிறது, அதிகாரம் கையில் இருக்கு, அரண்மனை வாழ்க்கை’ன்னு பொறாமைப்பட்டேன்.
Crown நாடகம் பார்த்த பிறகு, ‘சித்த நேரம் சும்மா உட்காரு, முகம் வாடினாப்ல இருக்கு காபி குடிக்கிறாயா? என்று கேட்கத் தோன்றுகிறது. பாவம் பசிக்கும் என்று 2 தோசை ஊத்தி தர தோன்றுகிறது. தாயாக மாறி தலை கோத தோன்றுகிறது

உங்களிடம் இருப்பது சிறகுகள் அல்ல சிலுவைகள் என்று தோன்றுகிறது 96 வயசாம்.. ஆனா அந்த புன்னகை நேத்து பிறந்த குழந்தை மாதிரி இருக்கு.
உலகெங்கும் ஒலிக்கும் உங்கள் புகழால் பெருமை கொள்கிறது பெண்ணினம்” என்று ராணிக்கு அஞ்சலிப் பதிவை வெளியிட்டுள்ளார்.
1952 ஆம் ஆண்டு அரியணை ஏறிய ராணி, 96 வயதில் உலகின் மிக மூத்த ராணியாக இருந்தார்.
அவர் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள அவரது அரண்மனையான பால்மோரலில் தனது குடும்பத்தினரால் சூழப்பட்ட நிலையில் நிம்மதியாக உயிர் விட்டதாக அவரது குடும்பத்தினர் வியாழக்கிழமை அறிவித்தனர்.
தி கிரவுன் நாடகத்தின் ஐந்தாம் சீசன் நெட்ஃபிலிக்ஸில் திரைக்கு வர இருந்த நேரத்தில் ராணி எலிசபெத் காலமாகியிருக்கிறார். இந்த நிலையில் ஆறாம் சீசன் தயாரிப்பு தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது.
–ஆரா
ராணி எலிசபெத் மறைவின் போது தோன்றிய இரட்டை வானவில்: பொதுமக்கள் உருக்கம்!